ஹிமாசல்லில் பாரா கிளைடிங் விபத்தில் சுற்றுலாப் பயணி பலி

-நமது நிருபர்-

உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவை சேர்ந்தவர் சுபம் டோப்லியால், 26. இவர் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் பணிபுரிந்து வந்தார். தனது சகோதரி மற்றும் மூன்று உறவினர்களுடன் ஹிமாச்சலப் பிரதேசத்திற்குச் சுற்றுலா சென்றிருந்தார். பில்லிங் பகுதியிலிருந்து உள்ளூர் விமானி வினய் குமார் என்பவருடன் இருவர் பயணிக்கும் 'டேன்டம் பாராகிளைடரில்' சுபம் முதலில் பறக்க துவங்கினார்.

புறப்பட்ட 6 நிமிடங்களிலேயே பாராகிளைடரில் இருந்து சுபம் நடுவானில் தவறி, பாரி கிராமத்திற்கு அருகிலுள்ள அடர்ந்த வனப்பகுதியில் விழுந்தார். விமானி வினய் குமார் பாதுகாப்பாகத் தரையிறங்கி இது குறித்துத் தகவல் கொடுத்தார். உடனடியாக தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. பிறகு அடர்ந்த வனப்பகுதியிலிருந்து சுபமின் உடல் மீட்கப்பட்டது.

பாராகிளைடர் விமானி வினய் குமார் மீது கவனக்குறைவால் மரணம் விளைவித்ததாக கூறி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பறந்து கொண்டிருந்த போது, சுற்றுலா பயணியின் பாதுகாப்பு பெல்ட் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டதா என்பது குறித்தும் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement