அரசு செவிலியர் அதிகாரிகள் சங்க போராட்டம் குறித்து விழிப்புணர்வு

புதுச்சேரி: புதுச்சேரி அரசு செவிலியர் அதிகாரிகள் சங்கத்தின் சார்பில், போராட்ட நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சங்க நிர்வாகிகள், செவிலியர் அதிகாரிகளை சந்தித்து பேசினர்.

புதுச்சேரி அரசு செவிலியர் அதிகாரிகள் சங்கத்தின் சார்பில், பல்வேறு கோரிக்கைகள் குறித்து வலியுருத்தி வாயிற் கூட்டங்கள், கடிதம் அனுப்புதல், கருப்பு பேட்ஜ் அணிந்து பணி செய்தல், வெளி நடப்பு மற்றும் தர்ணா போராட்டங்களில் ஈடுபட உள்ளனர். அதன்படி, வரும் 16ம் தேதி கவர்னர், தலைமை செயலருக்கு கடிதம் அனுப்பும் அஞ்சல் அட்டை இயக்கம், வரும் 18 மற்றும் 19ம் ஆகிய தேதிகளில், கருப்பு பேட்ஜ் அணிந்து பணி செய்யும் போராட்டம் நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக, ஹரிதாஸ், சங்கீதா, ஜெகநாதன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமுதாய நலவழி மையங்கள், அரசு மருத்துவமனைகளுக்கு சென்று செவிலியர்களின் கோரிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

மேலும், அஞ்சல் அட்டை இயக்கத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கி, செவிலியர்களிடம் அஞ்சல் அட்டைகளை நேரடியாக வழங்கி, கோரிக்கைகளை ஆதரித்து கையெழுத்து பெற்று வருகின்றனர்.

Advertisement