மனித உரிமை மீறல் நடந்ததாக கிரானைட் வீரமணி மகள் வழக்கு: சிறப்பு புலனாய்வு குழுவுக்கு 'நோட்டீஸ்'

14

சென்னை: கிரானைட் வீரமணி மகள் அர்ச்சனா, தனக்கு இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க கோரி தாக்கல் செய்த மனுவுக்கு, சிறப்பு புலனாய்வு குழு பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறுமியரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், கிரானைட் வீரமணி, 85, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கை, சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. கடந்த அக்., 23ம் தேதி, சிங்கப்பூரில் உள்ள தன் மகனை காண, விமானத்தில் பயணிக்க இருந்த, வீரமணியின் மகள் அர்ச்சனாவை, சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

எந்த காரணமும் கூறாமல், விமான பணியாளர்கள், தன்னை விமானத்தில் இருந்து இறக்கி விட்டதாகவும், அதன் பின் சிறப்பு புலனாய்வு குழு அலுவலகத்தில், தனக்கு ஏற்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்தும் விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் அர்ச்சனா மனு தாக்கல் செய்தார்.

அதில், 'எந்தவொரு சம்மன், நீதிமன்ற வாரன்ட், லுக் அவுட் நோட்டீஸ் இல்லாமல், சிறப்பு புலனாய்வு குழு, என்னை அழைத்து சென்றது. சிறப்பு புலனாய்வு குழு அலுவலகத்தில் மயங்கி விழுந்ததும், மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டேன். அதன்பின், அக்., 25ம் தேதி ஆஜராகும்படி, சிறப்பு புலனாய்வு குழு சம்மன் அனுப்பியது. விசாரணையின்போது, என்னிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட, 'லேப்டாப்' உள்ளிட்ட ஆவணங்களை திரும்பத் தர உத்தரவிட வேண்டும்' என, குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு, நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், 'இந்த வழக்கில் குற்றம் சாட்டப்படாத அர்ச்சனாவை, விசாரணை என்ற பெயரில் அழைத்து சென்று, கழிப்பறையை கூட பயன்படுத்த அனுமதிக்காமல், நீண்ட நேரம் காத்திருக்க வைத்திருந்தனர். இதனால், அவர் சிறப்பு புலனாய்வு குழு அலுவலகத்திலேயே மயங்கி விழுந்தார். இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என தெரிவிக்கப்பட்டது.

காவல்துறை தரப்பில், 'விசாரணைக்கு சம்மன் கொடுக்க, மனுதாரர் வீட்டுக்கு சென்றபோது, அவர் இல்லாததால், வீட்டு காவலாளியிடம் சம்மன் கொடுக்கப்பட்டது. சம்மனை மனுதாரரின் 'வாட்ஸாப்' எண்ணுக்கு போலீசார் அனுப்பினர். அதன்பின், மனுதாரரின் மொபைல் போன் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு விட்டது.

'மனுதாரர் இந்தியாவை விட்டு வெளியேறுவதாக வந்த தகவலை தொடர்ந்து, விமான நிலையத்துக்கு சென்று விசாரணைக்கு அழைத்து வரப்பட்டார். விசாரணையின் போது நடந்ததாக, மனுதாரர் தரப்பில் கூறப்படும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை. இது தொடர்பாக பதில் அளிக்க அவகாசம் வேண்டும்' என தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களை பதிவு செய்த நீதிபதி, இந்த மனுவுக்கு சிறப்பு புலனாய்வு குழு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் 17ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
Latest Tamil News
@quote@40 நிமிடம் விசாரணை

சிறுமியரை பாலியல் வன்கொடுமை செய்த புகார் அடிப்படையில், கிரானைட் வீரமணி மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட சாந்தி, மகேந்திர சிம்ஹன் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். மேலும், வீரமணி, சாந்தி, மகேந்திர சிம்ஹன் மீது, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், குண்டர் தடுப்பு சட்ட நடவடிக்கை குறித்த விசாரணைக்காக, வீரமணி உட்பட மூவரும், சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள, குண்டர் சட்ட அறிவுரை கழகத்தில் நேற்று பிற்பகல் ஆஜர்படுத்தப்பட்டனர். புழல் சிறையில் இருந்து, பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்ட மூவரும், ஓய்வுபெற்ற நீதிபதி பாரதிதாசன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது குறித்து, போலீஸ் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தின் அடிப்படையில், மூவரிடமும் விசாரணை நடந்தது. மேலும் தடுப்பு காவல் குறித்தும், குற்றப் பின்னணி குறித்தும், மூவரிடமும் 40 நிமிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின் விசாரணை முடிந்து, மூவரும் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்quote
.

Advertisement