ஜல்லி பெயர்ந்ததால் பாடாவதியான சாலை வாகன ஓட்டுனர்கள் கடும் அவதி

கரூர்:கரூர் மாநகராட்சிக்குட்பட்ட, தான்தோன்றிமலை ஆசிரியர் காலனி சாலை பல மாதங்களாக குண்டும் குழியுமாக சேதமடைந்து காணப்படுவதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

கரூர் மாநகராட்சி, 38-வது வார்டுக்குட்பட்ட தான்தோன்றிமலை தின்னப்பா நகர் விரிவாக்க பகுதியில் ஆசிரியர் காலனி அமைந்துள்ளது. ஏராளமான குடியிருப்பு நிறைந்த இப்பகுதியில் பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள், அதிகளவில் வசித்து வருகின்றனர்.
மேலும் காந்திகிராமம் மற்றும் கருப்பகவுண்டன்புதுார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும்

முக்கிய வழித்தடமாகவும், ஆசிரியர் காலனி சாலை விளங்கி வருகிறது. நாள்தோறும் நுாற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்கள் இவ்வழியாக சென்று வருகின்றன.

இச்சாலை கடந்த பல மாதங்களாக பராமரிப்பின்றி, குண்டும் குழியுமாக உருக்குலைந்து காட்சியளிக்கிறது. சாலையின் பல இடங்களில் தார் பெயர்ந்து, கூர்மையான ஜல்லிக்கற்கள் வெளியே நீட்டிக் கொண்டிருக்கின்றன.
இதனால் வாகனங்களை இயக்க முடியாமல், ஓட்டுனர்கள் நிலைதடுமாறி கீழே விழுவது தொடர்கதையாக உள்ளது.
மழைக்காலங்களில் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால், பாதசாரிகள் கூட நடந்து செல்ல முடியாத அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, சேதமடைந்த சாலையை சீரமைத்து, புதிய தார்ச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.

Advertisement