வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு திட்டம் மாவட்டத்தில் 5 வட்டாரங்களில் தேர்வு

கரூர்:மாவட்டத்தில் வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ், ஐந்து வட்டாரங்களில் தேர்வு நடக்கிறது.

இது குறித்து, கலெக்டர் பிரசன்னா ராமசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி, க.பரமத்தி, கிருஷ்ணராயபுரம், தான்தோன்றிமலை, தோகைமலை ஆகிய ஐந்து வட்டாரங்களில், கால்நடை பராமரிப்பு துறையின், வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்பு திட்டம் செயல்படுத்த தேர்வு செய்யப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் வசிக்கும் கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற விதவை, மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை வழங்கி ஆடுகள் வழங்கப்படும்.

5 வெள்ளாடு வழங்கப்படும்

தேர்வு செய்யப்படும் தகுதியுள்ள பயனாளிகள் ஒவ்வொருவருக்கும் தலா, 5 வெள்ளாடு அல்லது செம்மறியாடுகள் இலவசமாக வழங்கப்படும்.
பயனாளிகளுக்கு வழங்கப்படும், 5 ஆடுகளும் இரண்டு ஆண்டுகளுக்கு கட்டாய காப்பீடு செய்யப்படுவதோடு, அவற்றுக்கான காப்பீட்டு கட்டணத்தையும் அரசே ஏற்கும். இது தவிர, ஆடுகளுக்கான தீவனம் மற்றும் பராமரிப்பு செலவுகளுக்காக இரண்டு தவணைகளாக கூடுதல் நிதியுதவியும் நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும்.

18-60 வயதுக்குள் இருக்க வேண்டும்

இத்திட்டத்தில் விண்ணப்பதாரர் தேர்வு செய்யப்பட்ட வட்டாரத்திற்கு உட்பட்ட கிராம பஞ்., பகுதியில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் போது, 18 முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். குடும்பத்தின் ஆண்டு வருமானம், 2.50 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் அல்லது அவரது குடும்ப உறுப்பினர் பெயரில் விவசாய நிலங்கள் எதுவும் இருக்கக் கூடாது.

பல்நோக்கு பணியாளர்

கால்நடை பராமரிப்புத் துறை மூலம் கடந்த, 5 ஆண்டுகளில் வழங்கப்பட்ட கறவை மாடு, விலையில்லா ஆடுகள் மற்றும் கோழி வளர்ப்பு போன்ற வாழ்வாதார திட்டங்களில் பயன் பெற்றவராக இருக்கக் கூடாது. இத்திட்டத்திற்கான விண்ணப்பங்கள் அனைத்தும் கால்நடை பராமரிப்புத் துறையின் பிரத்யேக இணையதளம்வழியாக மட்டுமே பெறப்படும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க ஏதுவாக, விண்ணப்ப உதவி மையங்கள் அமைக்கப்பட்டு, பல்நோக்கு பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்
இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.

Advertisement