ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க அமெரிக்காவுக்கு 7 நிபந்தனைகள் விதித்தது ஈரான்

- நமது நிருபர்-

அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது கடந்த பிப்ரவரியில் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்க, சர்வதேச நாடுகளுக்கு கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படும் கப்பல் வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை மூடியது. உலகளவில் கடும் எரிபொருள் தட்டுப்பாடும், விலை உயர்வும் ஏற்பட்டு இருக்கிறது.

போரை முடிவுக்கு கொண்டு வர கத்தார், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் தீவிர முயற்சி செய்தது. ஆனால் உடன்பாடு எட்டப்படவில்லை. தற்போது ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதற்கு, பேச்சுவார்த்தை நடத்தவும் 7 நிபந்தனைகளை அமெரிக்காவுக்கு ஈரான் விதித்துள்ளது.

* அமெரிக்கா ஈரான் மீதான தடைகளை நீக்க வேண்டும்.

* முடக்கப்பட்ட ஈரான் சொத்துக்களை விடுவிக்க வேண்டும்.

* ஈரான் துறைமுகங்கள் மீதான அமெரிக்கக் கடற்படை முற்றுகையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.

* போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

* லெபனான் உட்பட பிராந்திய அளவிலான சண்டைகளை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட 7 நிபந்தனைகளை அமெரிக்கா நிறைவேற்றும் வரை ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்கவோ அல்லது அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளை மீண்டும் துவங்கவோ மாட்டோம் என்று ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

அதிகாரப்பூர்வ பதிலுக்காக ஈரான் காத்திருக்கும் நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைக்கான பொறுப்பு இப்போது அமெரிக்காவை சார்ந்துள்ளது என பார்லிமென்ட் சபாநாயகர் முகமது பாகர் தெரிவித்துள்ளார். இருப்பினும், ஈரான் 7 நிபந்தனைகளின் முழுமையான பட்டியலையும் வெளியிடவில்லை. ஒரு சில நிபந்தனைகளை மட்டுமே தெரிவித்துள்ளது.

Advertisement