நாட்டின் முதல் புல்லட் ரயில் சேவை அடுத்தாண்டு துவக்கம்! குஜராத்தின் சூரத் - வாபி இடையே இயக்க முடிவு

புதுடில்லி: நாட்டின் முதல் உள்நாட்டு தயாரிப்பு அதிவேக புல்லட் ரயில் சேவை, அடுத்தாண்டு இறுதியில் தொடங்கும் என, தகவல் வெளியாகி உள்ளது. குஜராத்தின் சூரத் - வாபி நகரங்களுக்கு இடையே இயக்க முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இருப்பு பாதைகளின் சோதனை அடுத்த ஆறு மாதங்களில் நடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டில் பஸ், ரயில், விமானம் என, பல போக்குவரத்து சேவைகள் இருந்தாலும், பெரும்பாலான மக்கள் ரயில் பயணங்களையே விரும்புகின்றனர். எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளை தொடர்ந்து, பெரு நகரங்களை இணைக்கும், 'வந்தே பாரத்' ரயில் சேவை நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தொடர்ந்து, அதிவேக புல்லட் ரயில் சேவை திட்டத்தை மத்திய அரசு தொடங்கி உள்ளது.

மணிக்கு, 280 கி.மீ., வேகத்தில் செல்லும் வகையிலான நாட்டின் முதல் அதிவேக புல்லட் ரயில் சேவை, மஹாராஷ்டிராவின் மும்பை - குஜராத்தின் ஆமதாபாத் இடையே இயக்க முடிவு செய்யப்பட்டு, இத்திட்டத்துக்கு, 2017ல் அடிக்கல் நாட்டப்பட்டது.

8 ரயில் நிலையங்கள்



மஹாராஷ்டிர அரசின் அனுமதி மற்றும் நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான பிரச்னைகளால் இரண்டரை ஆண்டுகள் தாமதமானது.

தொடர்ந்து, கொரோனா தொற்றால் மேலும் இரண்டு ஆண்டுகள் புல்லட் ரயில் திட்டம் பாதிக்கப்பட்டது. பின், 2021ல் முழுவீச்சில் கட்டுமான பணிகள் தொடங்கின. மும்பை - ஆமதாபாத் இடையிலான, 508 கி.மீ., துாரத்துக்கு கட்டுமான பணிகள் நடக்கின்றன.

இது குறித்து, பா.ஜ.,வைச் சேர்ந்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:

கடந்த செப்., நிலவரப்படி, 456 கி.மீ., துாரத்துக்கு துாண்கள் அமைக்கும் பணியும், 371 கி.மீ., துாரத்துக்கு மேம்பால பாதை அமைக்கும் பணியும் முடிந்துள்ளன. 299 கி.மீ., துாரத்துக்கு, 6 லட்சம் ஒலி தடுப்புச் சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 206 கி.மீ., மேம்பால பாதையில், 9,300 மின் கம்பங்கள் நிறுவப்பட்டுள்ளன.

நான்கு மலைப் பகுதிகளுக்கான சுரங்கப்பாதைகள் தோண்டி முடிக்கப்பட்டுள்ளன. மஹாராஷ்டிராவில் அமைக்கப்படும், 21 கி.மீ., நீள சுரங்கப்பாதையில், மலை குடைவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, 5 கி.மீ., துாரத்துக்கு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. எட்டு ரயில் நிலையங்களின் கட்டுமான பணிகள் முடிவடைந்துள்ளன.

சபர்மதி, சூரத், தானே ஆகிய மூன்று நகரங்களில் ரயில் பராமரிப்பு பணிமனைகள் அமைக்கும் பணிகளும் நடக்கின்றன. மஹாராஷ்டிராவில், 21 கி.மீ., நீளத்துக்கு சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. இதில், 7 கி.மீ., துாரம் தானேவில் சிற்றோடைக்கு அடியில் கடலுக்குள் செல்கிறது. இது, நாட்டின் முதல் கடலடி ரயில் சுரங்கப்பாதை ஆகும்.

இத்திட்டத்துக்காக, உள்நாட்டிலேயே, 'பி 28' ரக புல்லட் ரயிலை கர்நாடகாவின் பெங்களூரில் உள்ள, 'பாரத் எர்த் முவர்ஸ் லிமிடெட்' நிறுவனம் மற்றும் தமிழகத்தின் சென்னையில் உள்ள, ஐ.சி.எப்., எனப்படும் ரயில் பெட்டி இணைப்பு தொழிற்சாலை இணைந்து தயாரிக்கின்றன.

கட்டமைப்பு சோதனை



புல்லட் ரயிலுக்கான முதல் பெட்டி தயாரிக்கப்பட்டு, கட்டமைப்பு சோதனை நடக்கிறது. மணிக்கு அதிகபட்சம், 280 கி.மீ., வேகத்தில் செல்லும் வகையில் இந்த ரயில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. அடுத்த கட்டமாக மணிக்கு, 350 கி.மீ., வேகத்தில் செல்லக்கூடிய, 'பி 35' ரக ரயில் உருவாக்கப்படும். முதற்கட்டமாக, சூரத் - வாபி இடையே அடுத்தாண்டு இறுதியில் புல்லட் ரயில் சேவை தொடங்கும்.

இதற்கான இருப்பு பாதைகள் சோதனை பணிகள் அடுத்த ஆறு மாதங்களில் நடக்கும். சூரத் - வாபியை தொடர்ந்து, படிப்படியாக மும்பை வரையிலான முழு வழித்தடத்திலும் சேவை விரிவுபடுத்தப்படும். மும்பை - ஆமதாபாத் இடையிலான, 508 கி.மீ., பயணத்தை வெறும், 1 மணி நேரம் 58 நிமிடங்களில் கடக்க முடியும். தற்போது சாலை வழியாக இதே பயணத்துக்கு, 8 முதல் 9 மணி நேரம் ஆகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பயணியரின் தேவைகள், வசதிகள் மற்றும் பாதுகாப்பை கருதி புல்லட் ரயில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. மொத்தம், 660 அடி நீளமுள்ள இந்த ரயிலில் எட்டு பெட்டிகள் இடம்பெறும். 557 பேர் பயணிக்க முடியும். மாற்றுத்திறனாளிகளுக்காக இரண்டு இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஏழு பெட்டிகளில் சாதாரண வகுப்பு இருக்கைகளும், ஒரு பெட்டியில் சொகுசு வகுப்பு இருக்கைகளும் அமைக்கப்படும். சாதாரண வகுப்பில், 3 + 2 என்ற வரிசையிலும், சொகுசு வகுப்பில், 2 + 2 என்ற வரிசையிலும் இருக்கைகள் இருக்கும். ரயிலின் இரு முனைகளிலும் ஓட்டுநர் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதிநவீன கட்டுப்பாட்டு அமைப்புகள் மூலம் ரயிலின் இயக்கம் கண்காணிக்கப்படும்.

Advertisement