நீருயிரி மையத்தில் மீன் வளர்ப்பு பயிற்சி

கிருஷ்ணகிரி: புங்கம்பட்டி அடுத்த பாரூரில் அமைந்துள்ள ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு மையத்தில், மீன்வளர்ப்பு குறித்து ஒரு நாள் கட்டண பயிற்சி நேற்று நடந்தது. பயிற்சியை உதவி பேராசிரியர் சோமு சுந்தர்லிங்கம், தொழில் நுட்ப வல்லுனர்கள் தமிழ் காவியா, வேல்முருகன், வானதி, ரகு, தட்சிணாமூர்த்தி, தமிழரசு, பழனி மற்றும் சோனியா ஆகியோர் இணைந்து நடத்தினர். பயிற்சியின் போது மீன் பண்ணை அமைத்தல், குளம் வெட்டுதல், மீன்
குஞ்சுகளை தேர்வு செய்தல், நீர்தர மேலாண்மை குறித்தும், வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு மையத்தின் செயல்பாடுகள் விளக்கி கூறப்பட்டது.
தொழில் வல்லுனர் வேல்முருகன், பாரூர், உயிரி உணவு உற்பத்தி குறித்த செயல் விளக்கங்களை பயனாளிகளுக்கு எடுத்துரைத்தார். தொடர்ந்து, பண்ணை மேலாளர் தமிழ் காவியா நீர் தர ஆய்வு குறித்து விரிவாக எடுத்துரைத்து செயல் விளக்கமும் செய்து காட்டினார். இறுதியாக பாரூர் பண்ணையின் செயல் விளக்கங்களில் ஒருங்கிணைந்த மீன் மற்றும் தாவர வளர்ப்பு, பண்ணையின் திலேப்பியா மற்றும் பாகு மீன் பொரிப்பகங்கள் மற்றும் மீன்
களுக்கு வழங்கப்படும் தீவனங்கள் குறித்த செயல் விளக்கங்கள் அளிக்கப்பட்டன. நன்னீர் இறால் மற்றும் பண்ணையில் பராமரிக்கப்படும் வண்ண மீன்கள் ஆகியன குறித்து, செயல்முறை விளக்கங்களாக பண்ணையாளர்கள் பார்வையிட்டனர். பயிற்சியின் போது பயனாளிகளுக்கு இலவச மதிய உணவும், இறுதியில் பயிற்சிக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இதில், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலுார், திருவண்ணாமலை, கோவை மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த, 31 பேர் கலந்து கொண்டனர்

Advertisement