போலி ஆவணம் மூலம் நிலம் மோசடி சார் பதிவாளர் உட்பட 3 பேர் மீது வழக்கு

புதுச்சேரி: புதுச்சேரியில், போலி ஆவணம் மூலம் நில விற்பனை செய்தது தொடர்பாக சார் பதிவாளர் உட்பட மூன்று பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி ரெயின்போ நகரை சேர்ந்தவர் ஆண்டாள்,87. இவர், கருவடிக்குப்பத்தில் கடந்த 1974ம் ஆண்டு நிலம் வாங்கினார். அந்த நிலம் தொடர்பாக கடந்த 2024ம் ஆண்டு உழவர்கரை சார் பதிவாளர் அலுவலகத்தில் விற்பனை பத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த விற்பனை பத்திரம் ஒரு பவர் பத்திரம் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆண்டாள் பவர் பத்திரம் வழங்கி மன்னாதன் என்பவர் 1995ம் ஆண்டும், சுப்ரமணியன் என்பவர் 2020ம் ஆண்டும் இறந்துவிட்டதாகவும், இருவரும் உயிருடன் இல்லாத நிலையில், அவர்களது மருமகனான ஆறுமுகம் (எ) வீராசாமி பவர் பத்திரத்தை பயன்படுத்தி போலி ஆவணம் மூலம் தனது மனைவி ஜெயகாந்தம் பெயரில் நிலத்தை விற்பனை செய்யததாக அரசு அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார்.

ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தொடர்ந்து இது குறித்து அவர் புதுச்சேரி முதலாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் புகார் குறித்து நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு கடந்த 16ம் தேதி உத்தரவிட்டது.

இதையடுத்து லாஸ்பேட்டை போலீசார், சார் பதிவாளர் பாலமுருகன், ஆறுமுகம் (எ) வீராசாமி, ஜெயகாந்தம் ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement