கீழக்கரையில் நாய்களுக்கு கருத்தடை செய்யும் பணி
கீழக்கரை: கீழக்கரை நகராட்சியில் 15வது நிதிக்குழு சார்பில் ஏ.பி.சி., (அனிமல் பெர்த் கண்ட்ரோல்) எனப்படும் நாய்களுக்கான கருத்தடை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
கீழக்கரை அருகே நகராட்சி குப்பை கிடங்கு அமைந்துள்ள மோர்குளம் பகுதியில் உள்ள இடத்தில் பிடித்து வரக்கூடிய நாய்களுக்கு கு.க., செய்யப்படுகிறது.
கீழக்கரை நகராட்சி கமிஷனர் கிருஷ்ணவேணி மற்றும் சுகாதார ஆய்வாளர் பரக்கத்துல்லா ஆகியோர் கூறியதாவது: கீழக்கரை நகராட்சியில் 179 நாய்களுக்கும், ராமநாதபுரம் நகராட்சியில் 105 நாய்களுக்கும், ராமேஸ்வரம் நகராட்சியில் 101 நாய்களுக்கும் மொத்தம் 385 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்கள் தாங்கள் வளர்க்கும் செல்லப்பிராணி நாய்களை பொதுவெளியில் கட்டுப்பாடின்றி சுற்றி திரிய விடாமல் நகராட்சியில் உரிய உரிமை பெற்று வளர்க்க வேண்டும். வளர்க்கப்படும் நாய்களுக்கு உரிய கால இடைவெளியில் வெறிநாய்க்கடி தடுப்பூசி ஏ.ஆர்.வி., செலுத்தி அதற்கான பதிவுகளை பராமரிக்க வேண்டும். தெருக்களில் தெரு நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துதல் வெறிநாய் கடி நோயை தடுப்பது உள்ளிட்டவைகளின் மூலமாக பதிவுகள் பராமரிக்கப்படுகிறது. இதற்கென தனியாக அறுவை சிகிச்சை மையம் இயங்கி வருகிறது என்றனர்.