பேண்டு வாத்திய போட்டி கல்வி அலுவலகத்தில் புகார்

கோவை: கல்வித்துறை அனுமதியின்றி பேண்டு வாத்திய போட்டிகள் நடத்தப்படுவதுடன், அதற்கு மாணவர்களிடம் அதிக நுழைவுக்கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.

இரு நாட்களுக்கு முன் சூலுாரில், பள்ளிகளுக்கு இடையேயான பேண்டு வாத்திய போட்டிகள் நடத்தப்பட்டன. இதுகுறித்து அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அறிவிப்பு வழங்கப்படவில்லை.

இப்போட்டியில் பங்கேற்க மாணவன் ஒருவருக்கு, 250–300 ரூபாய் வீதம் வசூலித்தும், போட்டி நடந்த இடத்தில் அடிப்படை வசதிகள் ஏதும் ஏற்படுத்தப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.

இசை ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், ‘பிற மாநிலங்களில் பேண்டு வாத்திய போட்டி அரசு அனுமதியுடன் நடக்கிறது. கோவையில் ஐந்து ஆண்டுகளாக கல்வித்துறையின் அனுமதியின்றி பள்ளிகளில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் பங்கேற்ற பள்ளிகளே மீண்டும் மீண்டும் பங்கேற்கின்றன.

இரு நாட்களுக்கு முன், சூலுாரில் நடந்த போட்டியில் அதிக நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்பட்டது; ஆனால் உரிய வசதிகள் செய்யவில்லை. இதுபோன்ற சிக்கல்களால் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளால் போட்டியில் பங்கேற்க முடியவில்லை.

மாணவர்களை வாகனத்தில் அழைத்துச்செல்ல நிதியும் இல்லை. முறையான அனுமதி பெற்று அனைத்து பள்ளிகளும் பங்கேற்கும் வகையில் பேண்டு வாத்திய போட்டிகளை நடத்தவேண்டும். இதுகுறித்து, மாவட்ட கல்வி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளோம் ’ என்றனர்.

Advertisement