அங்கீகரிக்கப்படாத முகப்பூச்சு க்ரீம்கள் விற்றால் கடும் நடவடிக்கை; எச்சரிக்கிறது கேரள அரசு

கேரளாவில் மலப்புரத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், சருமத்தின் நிறத்தை மாற்றும் முகப்பூச்சு க்ரீம் ஒன்றை விளம்பர வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பார்த்துள்ளார். அதில் உந்தப்பட்ட அவர், அதில் இருந்து மொபைல் எண்ணை தொடர்பு கொண்டு க்ரீமை ஆர்டர் செய்து பயன்படுத்தி வந்துள்ளார்.

ஓராண்டு காலம் அந்த க்ரீமை சிறுமி உபயோகிப்படுத்தி இருந்த நிலையில், அவருக்கு திடீரென ரத்த அழுத்தம், மயக்கம், கால்களில் வீக்கம் போன்ற தொந்தரவுகள் ஏற்பட்டன.

மருத்துவ பரிசோதனையில் சிறுமியின் ரத்தத்தில் ஆபத்தான அளவில் பாதரசம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், சிறுநீரகம் பாதிக்கப்பட்டு இருப்பதும் தெரிந்தது. மருத்துவர்கள் க்ரீமை பரிசோதித்த போது, அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக பாதரசம் கலந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட க்ரீம் தயாரிப்பு நிறுவனத்திற்கு பாதிக்கப்பட்ட சிறுமி புகார் அனுப்பியும் பதில் இல்லை.

பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் கேரள அரசு தலையிட்டுள்ளது. அங்கீகரிக்கப்படாத சரும நிறத்தை அழகூட்டும் தன்மை கொண்டது, மேம்படுத்தப்பட்ட க்ரீம் ஆகியவற்றை பயன்படுத்துவோர் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தி இருக்கிறது.

இதுகுறித்து சுகாதார அமைச்சர் முரளிதரன் கூறி உள்ளதாவது;

இணையதளங்கள் மூலம் கிடைக்கும் முகப்பூச்சு க்ரீம்களை வாங்கும் முன் நுகர்வோர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அந்த பொருட்களின் தயாரிப்பு விவரங்கள், மூலப்பொருட்கள் பற்றி தெளிவாக உள்ளதா என பயன்படுத்தும் முன் பார்க்க வேண்டும்.

அங்கீகரிக்கப்படாத க்ரீம்கள் பற்றிய புகார்கள் வந்தால் உரிய ஆய்வுகள் நடத்தி தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement