வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் பொள்ளாச்சி சப்–கலெக்டர் ஆய்வு
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் வால்பாறை தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நடந்தது.
தமிழகத்தில் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த, 12ம் தேதி வெளியிடப்பட்டது. இதில், பொள்ளாச்சி தொகுதியில், 2 லட்சத்து, 5 ஆயிரத்து, 179 பேரும், வால்பாறை தொகுதியில், 1 லட்சத்து, 74 ஆயிரத்து, 492 பேர் உள்ளனர்.
இந்நிலையில், 21, 22ம் தேதியன்று வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நடந்தது. இதில், ஏராளமானோர் பங்கேற்று புதிய வாக்காளர் அடையாள அட்டை, பெயர் நீக்கம், பெயர் திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்டவைகளை செய்து கொண்டனர்.
இதை பொள்ளாச்சி சப்– கலெக்டர் ராமகிருஷ்ண சாமி ஆய்வு செய்தார்.
வால்பாறை
வால்பாறையில், 70 ஓட்டுச்சாவடிகளில் வாக்காளர் சிறப்பு முகாம் நடந்தது. வால்பாறை தாசில்தார் அரசகுமார் தலைமையில் நடந்த சிறப்பு முகாமை தேர்தல் துணை வட்டாட்சியர் முத்து துவக்கி வைத்தார்.
தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது:
‘தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி 2027, ஜனவரி 1 ம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவோ, ஏற்கனவே இடம் பெற்றுள்ள பதிவுகளில் நீக்கம், திருத்தங்கள், இடம் மாற்றம் செய்யவோ விரும்பும் வாக்காளர்கள் தகுதியுள்ள குடிமக்கள் படிவங்கள், 6,7 அல்லது 8 ஆகியவற்றை பூர்த்தி செய்து முகாம் நடக்கும் நாட்களில், அந்தந்த ஓட்டுச்சாவடி அலுவலர்களிடம் வழங்கலாம்.
பெயர் சேர்த்தலுக்கான விண்ணப்பத்துடன், இருப்பிட முகவரி மற்றும் வயது ஆகியவற்றிற்கான சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும். எனவே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்யும் வாக்காளர்கள் இந்த முகாம்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.