ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு பாக்கு வரத்து

உடுமலை: உடுமலை பகுதிகளில், பாக்கு சாகுபடியில் அதிகளவு விவசாயிகள் ஈடுபட்டுள்ள நிலையில், அறுவடை செய்த பாக்கு விற்பனைக்காக ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

உடுமலை சுற்றுப்பகுதியில், கிணற்றுப்பாசனத்துக்கு, தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. வறட்சி மற்றும் நோய்த்தாக்குதல் உட்பட காரணங்களால், தென்னை மரங்கள் பாதிப்பு தொடர்கதையாக உள்ளது.

இதனால், மாற்று பயிர் சாகுபடிக்கு, விவசாயிகள் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர். அதன்படி, விளைநிலங்களில், தனிப்பயிராகவும், ஒரு சில இடங்களில் ஊடு பயிராகவும் பாக்கு மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கின்றனர்.

ஆண்டுக்கு, மூன்று முதல் ஐந்து முறை, பாக்கு அறுவடை மேற்கொள்ளப்படும் நிலையில், விவசாயிகள் அறுவடை செய்த பாக்குகளை, உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வந்து, உலர் களங்களில் காய வைத்து வருகின்றனர்.

ஒழுங்கு முறை விற்பனை கூட அதிகாரிகள் கூறுகையில், ‘உடுமலை பகுதிகளில் பாக்கு அறுவடை செய்யப்பட்டு, விவசாயிகள் கொண்டு வந்து காய வைத்து வருகின்றனர். காய்ந்ததும், இ–நாம் திட்டத்தின் கீழ் ஏல முறையில் விற்பனை செய்யப்படும்,’ என்றனர்.

Advertisement