ஸ்ரீ சத்ய சாய் உயர் கல்வி நிறுவனத்தில் பட்டமளிப்பு விழா
புட்டபர்த்தி: ஆந்திர மாநிலம், புட்டபர்த்தி, பிரசாந்தி நிலையத்தில், ஸ்ரீ சத்ய சாய் உயர் கல்வி நிறுவனத்தின், 45-வது ஆண்டு பட்டமளிப்பு விழா, ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் தெய்வீக முன்னிலையில் நடந்தது. ஆந்திரா கவர்னர் அப்துல் நசீர் பங்கேற்றார்.
ஸ்ரீ சத்ய சாய் உயர்கல்வி நிறுவனத்தின் துணைவேந்தர் ராகவேந்திர பிரசாத் வரவேற்று பேசுகையில், 2025–26ல் கல்வி நிறுவனம் அடைந்த முன்னேற்றங்கள், கல்வித் தரம், ஆராய்ச்சி, புத்தாக்கம் மற்றும் தொழில் துறை ஒத்துழைப்பு, சாதனைகளை எடுத்துரைத்தார். மேலும், ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் வகையில், உலகளாவிய மனித விழுமியங்கள் மீதான பிரசாந்தி நிலையத்தின் பிரகடனம் மற்றும் முக்கிய முன்னெடுப்புகளையும் நினைவு கூர்ந்தார்.
தொடர்ந்து, ஆந்திரா கவர்னர் அப்துல் நசீர், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு தங்கப் பதக்கங்கள் மற்றும் பட்டங்களை வழங்கி பேசினார்.
அப்போது அவர், ‘ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் தொலைநோக்குப் பார்வையின்படி பண்டைய குருகுல மரபில் வேரூன்றிய, விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட ஒருங்கிணைந்த கல்வி மற்றும் முழுமையான வளர்ச்சிக்கு, ஸ்ரீ சத்ய சாய் கல்வி நிறுவனம் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படுகிறது’ என, பாராட்டினார். விழாவில், கல்வி நிறுவன நிர்வாகிகள், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.