நகராட்சி நிர்வாகத்துறையில் பணியிட மாற்றம்; நிபந்தனைகள் விதித்தது தமிழக அரசு

இதுதொடர்பாக, நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி வெளியிட்டுள்ள அரசாணை:

நகராட்சி நிர்வாக துறையில் பணியிட மாற்றங்கள், இனி ஏப்.,1 முதல், மே 31 வரை மட்டுமே மேற்கொள்ளப்படும். அதற்கான விண்ணப்பங்கள், மார்ச் 1 முதல், 31ம் தேதி வரை மட்டுமே பெறப்படும்.

ஜூன் 1 முதல் மார்ச் 31 வரையிலான காலகட்டத்தில், புகார், இடமாற்றத்தின் வாயிலாக பதவி உயர்வு, நீண்டகால விடுப்புக்கு பின் மீண்டும் பணியமர்த்துதல், பதவி இறக்கம், இடைநீக்கம் ரத்து போன்ற காரணங்களுக்காக மட்டுமே பணியிட மாற்ற உத்தரவு வழங்கப்படும்.

ஏற்கனவே 3 ஆண்டுகள் பணிபுரிந்த இடத்தில் இருந்து, காலி பணியிடத்திற்கு அலுவலர்கள் மாற்றப்படுவர். 3 ஆண்டுகளுக்கு மேல், ஒரே இடத்தில் பணிபுரிய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

பதவி உயர்வு பெறுவோருக்கு, பணிபுரியும் உள்ளாட்சி தவிர்த்து, மற்றொரு உள்ளாட்சியில் பணி வழங்கப்படும். இடமாற்றத்திற்கு விண்ணப்பிப்போர், தற்போதுள்ள பணியில் குறைந்தபட்சம், ஓராண்டு கட்டாயம் பணியாற்றி இருக்க வேண்டும்.

ஒரு முறை ஒருவரின் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டால், அடுத்த 2 ஆண்டுகளுக்கு இடமாற்றத்திற்கு விண்ணப்பிக்க, அவர் தகுதி பெறமாட்டார். 3 ஆண்டுகள் ஒரு இடத்தில் பணிபுரிந்தவர், ஓய்வு பெறுவதற்கு ஓராண்டுக்கு குறைவாக இருந்தால், அவரை இடமாற்றம் செய்ய வேண்டியதில்லை.

வாழ்க்கை துணை பணிபுரியும் இடத்திற்கு, இடமாற்றம் கேட்டால், தற்போதுள்ள இடத்தில், குறைந்தபட்சம் ஓராண்டு பணியாற்றி இருக்க வேண்டிய அவசியமில்லை.

அதே போல, 40 சதவீதம் மாற்றுத் திறனாளிகள், சீறுநீரகம், இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள், புற்றுநோய், மூளைகட்டியால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், ஒராண்டு பணி நிபந்தனையில் இருந்து, விலக்கு அளிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement