கார்த்திகை முதல் பிரதோஷம் சிவாலயங்களில் தீப வழிபாடு
திருப்பூர்: கார்த்திகை மாதத்தின் முதல் பிரதோஷத்தை முன்னிட்டு, திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார சிவாலயங்களில் இன்று (நவ.,22) பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர்.
சிவாலயங்களில் மாதம் இருமுறை பிரதோஷ வழிபாடு நடைபெறுவது வழக்கம். கார்த்திகை தீபத்திருவிழாவுக்கு முந்தைய பிரதோஷம் என்பதால், இன்று சிவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் மாலை 4:00 மணிக்கு மூலவர், அதிகார நந்தி, உமாமகேஸ்வரருக்கு மஹா அபிஷேக பூஜை நடைபெற்றது. தொடர்ந்து மாலை 5:00 மணிக்கு அலங்கார பூஜை நடந்தது. நந்தியம்பெருமானுக்கு பக்தர்கள் வில்வம், தாமரை உள்ளிட்ட மலர் மாலைகளை அணிவித்து வழிபட்டனர். பின்னர் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய உமாமகேஸ்வரர், கோவில் பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருப்பூர், பல்லடம், அவிநாசி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிவாலயங்களிலும் பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தீபம் ஏற்றி தரிசனம் செய்தனர்.
கார்த்திகை மாத திங்கட்கிழமைகளில் சிவன் கோவில்களில் சங்காபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த வழிபாட்டில் பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து இறையருள் பெறலாம் என சிவாச்சாரியார்கள் தெரிவித்தனர்.
2 படங்கள்
பிரதோஷத்தை முன்னிட்டு, திருப்பூர், ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த நந்தியம்பெருமான்; வாலிபாளையம், கல்யாண சுப்ரமணிய சுவாமி கோவிலில்சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காசிவிஸ்வநாதர்.