தீபத்துாண் விஷயத்தில் தி.மு.க., பாணியில் த.வெ.க., அரசும் செயல்படுகிறது: ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் வேதனை

திருப்பரங்குன்றம்:

‘‘திருப்பரங்குன்றம் தீபத்துாணில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றும் விஷயத்தில் தி.மு.க., பாணியிலேயே த.வெ.க., அரசும் செயல்படுவது வருத்தம் அளிக்கிறது,’’ என, திருப்பரங்குன்றத்தில் ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி தீபம் ஏற்க விடாமல் கடந்த ஆண்டு தடுத்தனர். த.வெ.க., ஆட்சி வந்தது. தி.மு.க., கூட்டணியில் இருந்த கட்சிகள் த.வெ.க.,வுக்கு வந்தன. இவர்கள் கூட்டணிக்குள் இருந்து கொண்டே முதல்வர் ஜோசப் விஜய் அரசுக்கு நெருக்கடி கொடுக்கின்றனர்.

நீதிமன்றத்தை அவமதிக்க வேண்டும். அதை ஜோசப் விஜய் அரசின் மூலம் செய்ய வேண்டும் என தி.மு.க., சதி செய்கிறது. அதற்கு அமைச்சர் நிர்மல் குமார் பலியாகக்கூடாது. உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மறு சீராய்வு மனு தாக்கல் செய்திருப்பது நீதித்துறைக்கு விடப்பட்டுள்ள சவால். நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்துவது தான் அரசு இயந்திரம். த.வெ.க., கூட்டணி கட்சிகள் தி.மு.க.,விற்கு விசுவாசமாகவும், ஜோசப் விஜய்க்கு எதிராகவும் வெளிப்படையாக செயல்படுகின்றன.

கோயில் இடத்தில் தீபத்துாண்





1920ல் லண்டன் நீதிமன்றம் இப்பிரச்னைக்கு ஒரு முடிவு செய்தது. மலை மேல் தர்காவை நாங்களும் ஏற்றுக் கொண்டோம். அவர்களது வழிபாட்டை தடுக்கவில்லை. தீபத்துாண் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ளது. அதில் கார்த்திகை தீபம் ஏற்ற தான் கேட்கிறோம்.

மலை மேல் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு ஹிந்துக்கள் செல்லக்கூடாது என்பதற்காக 1957ல் திருப்பரங்குன்றம் மலை மேல் பாகிஸ்தான் கொடியை கட்டினர். அப்போது காங்., எம்.எல்.ஏ., வாக இருந்த சின்ன கருப்பதேவர், போராட்டம் நடத்தினார். அதன் பின்பு கொடி அகற்றப்பட்டது. இதை காங்., மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் நினைவில் கொள்ள வேண்டும்.

1980களில் ஹிந்து முன்னணி, ஹிந்து மக்கள் கட்சி, தீபம் ஏற்றும் இயக்கத்தை முன்னெடுத்தனர். 1994ல் மலை மேல் தீபம் ஏற்றலாம் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அப்போது தர்கா நிர்வாகம் தீபம் ஏற்றுவதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை என எழுதி கொடுத்தனர். இஸ்லாமியரின் ஓட்டுகளுக்காக அன்று இருந்த அரசுகள் தீபம் ஏற்ற வில்லை. மக்கள் இயக்கம் தொடர்ந்து நடந்தது. வழக்குகளும் தொடர்ந்து நடந்தன.

ஆக்கிரமிக்க முயற்சி





தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின்பு எஸ்.டி.பி.ஐ., அமைப்பினர் திருப்பரங்குன்றம் மலை மேல் ஆடு கோழிகளை பலியிட வந்தனர். அதை கோயில் நிர்வாகம் தடுத்து நிறுத்தியது. பின்பு திருப்பரங்குன்றம் மலையை ‘சிக்கந்தர் மலை’ என அழைக்கக்கூடாது, ஆடு, கோழி பலியிடக்கூடாது என எங்கள் கட்சி மாவட்ட தலைவர் சோலை கண்ணன் வழக்கு தொடர்ந்தார். வெற்றியும் கிடைத்தது.

நவ., 24 ல் தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற த.வெ.க., அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முருக பக்தர்களும் இஸ்லாமியர்களும் ஒன்றுபட்டு வாழ்கிறார்கள். திருப்பரங்குன்றம் மலை மேல் 2012ல் வெடிகுண்டு மருந்துகள் கைப்பற்றப்பட்டன. மலையை ஆக்கிரமிக்க முயற்சி நடக்கிறது என்றார்.

Advertisement