சபரிமலை ஏறும் பக்தர்கள் என்ன செய்ய வேண்டும்? கேரள சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு

சபரிமலை பயணத்தில் மலையேறும் போது பக்தர்கள் கையாள வேண்டிய வழிமுறைகளை கேரள சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டலகாலம் துவங்கியுள்ளது. பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், கேரள சுகாதாரத்துறை வெளியிட்ட வழிகாட்டுதல்கள்:

* இதய நோய் பாதிப்பு உள்ளவர்கள் சபரிமலை பயணத்துக்கு முன் டாக்டர்களின் ஆலோசனையை பெற வேண்டும்.

* சமீபத்தில் மாரடைப்பு ஏற்பட்டோர், இதய அறுவை சிகிச்சை, ஆஞ்சியோ பிளாஸ்ட் செய்தோர், டாக்டர்களின் ஆலோசனை இன்றி மலை ஏறக்கூடாது.

* பயன்படுத்திக் கொண்டிருக்கும் மருந்துகளை விரதம் என்ற பெயரில் நிறுத்தக் கூடாது. தேவையான மருந்துகள், அதற்கான குறிப்புகளை பக்தர்கள் தங்கள் கையில் வைத்திருக்க வேண்டும்.

* மலையேறும் போது அதிக வேகம் கூடாது. ஆங்காங்கே சற்று ஓய்வெடுத்த பின் மலை ஏற வேண்டும்.

* நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். உணவு சாப்பிடாமல் மலையேறக் கூடாது. கூட்டத்துக்கு இடையில் நுழைந்து ஏறுவது, ஓடுவது போன்ற செயல்களில் பக்தர்கள் ஈடுபடக்கூடாது.

* நெஞ்சுவலி, மூச்சடைப்பு போன்றவை ஏற்பட்டால் உடனடியாக மலை ஏறுவதை நிறுத்தி மருத்துவ உதவி பெற வேண்டும். நெஞ்சில் வலி, பாரம் போன்ற உணர்வு, மாறுபட்ட உடல்நிலை, அதிகமான வியர்வை, இதய துடிப்பில் வித்தியாசம், திடீரென்று ஏற்படும் அதிக சோர்வு, கை மற்றும் தாடை எலும்புகளில் வலி போன்ற அறிகுறி ஏற்பட்டால் உடனடியாக அங்கே அமர்ந்து கொண்டு மருத்துவ உதவி பெற வேண்டும்.

* தேவையான ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

* சபரிமலை பயணத்தில் மருத்துவ உதவி தேவைப்படுவோர் 04735 203232 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement