போதையில் டாக்டர் ஓட்டிய கார் மோதி மூவர் படுகாயம்

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் மதுபோதையில் அரசு டாக்டர் சுதாகர், 50, என்பவர் ஓட்டிய கார் மோதி, மூவர் படுகாயமடைந்தனர்.

செங்கத்தைச் சேர்ந்தவர் டாக்டர் சுதாகர். இவர், திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் உதவி பேராசிரியராக பணிபுரிகிறார். நேற்று (நவ.,21) இரவு, 8:00 மணி அளவில் தன் காரில் அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது அருந்தினார்.

அதன்பின், மதுபோதையில் காரை ஓட்டி கொண்டு வீட்டிற்கு சென்றபோது, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பைக் மற்றும் பொதுமக்கள் மீது மோதினார். இதில் ஏழுமலை, 57, என்பவருக்கு கால் முறிவு ஏற்பட்டது. மேலும், இருவர் படுகாயமடைந்தனர். மூவரையும் பொதுமக்கள் மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

போதையில் இருந்த சுதாகர், பொதுமக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தகவலறிந்த செங்கம் போலீசார், சுதாகரை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.

Advertisement