மாநில கூடைப்பந்து போட்டி: சென்னை அணி வெற்றி
நத்தம்:
நத்தம் ராம்சன்ஸ் மெட்ரிக் பள்ளியில் 3 நாள் நடந்த மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது.
இப்பள்ளியில் ராமா சதாசிவம் பழனியம்மாள் நினைவாக ராம்சன்ஸ் டிராபிக்கான, மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி மூன்று நாட்கள் நடந்தன. நவ.,20-ல் துவங்கிய போட்டியில் ராமநாதபுரம், திருச்சி, மதுரை, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 20 அணிகள் பங்கேற்றன. இதன் இறுதிப் போட்டி நேற்று நடந்தது. இதில் சென்னை வி.கே.,ஜெயராம் பி.பி.சி., அணியும், பொள்ளாச்சி பி.பி.சி., அணியும் மோதின. விறுவிறுப்பாக நடந்த போட்டியில் சென்னை அணி 67 புள்ளிகள் பெற்று முதலிடத்தையும், பொள்ளாச்சி அணி 55 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தை பெற்றன. பரிசளிப்பு விழாவில் தமிழ்நாடு கூடைப்பந்து கழகத் துணைத் தலைவர் செண்பகமூர்த்தி, நத்தம் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் கண்ணன் ஆகியோர் பங்கேற்று வெற்றி பெற்ற அணிகள், வீரர்களுக்கு பரிசுகளையும், காசோலைகளையும் வழங்கி, பாராட்டினார். சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு தடகள சங்கத்தின் செயலாளர் சிவக்குமார், தமிழ்நாடு மாநில கூடைப்பந்து மூத்த பயிற்சியாளர் முத்துராஜா ஆகியோர் பங்கேற்றனர். மேலும் திண்டுக்கல் மாவட்ட கூடைப்பந்து சங்கத் தலைவர் போஸ், இணைச் செயலாளர் ஞானவேல், பொருளாளர் ஸ்டாலின், துணைத்தலைவர் தர்மலிங்கம், நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்குணசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ராம்சன்ஸ் கல்விக் குழுமத் தலைவர் ராமசாமி நன்றி கூறினார். ஏற்பாடுகளை ராம்சன்ஸ் அறக்கட்டளை, ராம்சன்ஸ் கல்விக் குழுமத்தினர் செய்திருந்தனர்.