பெங்களூரில் ரவுடிகள் வீடுகளில் போலீசார் சோதனை: அடாவடி செய்தால் சிறை தான் என எச்சரிக்கை
பெங்களூரு: பெங்களூரில், 150க்கும் மேற்பட்ட ரவுடிகளின் வீடுகளில், போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினர். ‘‘ரவுடித்தனம் செய்தால் சிறையில் தள்ளுவோம்,’’ என, டி.சி.பி., எச்சரிக்கை விடுத்தார்.
முதல்வர் சிவகுமார் உத்தரவின் எதிரொலியாக, புதிதாக நியமிக்கப்பட்ட பெங்களூரு சென்ட்ரல், கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மண்டலங்களின் கமிஷனர்கள், டி.சி.பி.,க்கள், பல்வேறு போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் ரவுடிகள் வீடுகளில் நேற்று காலை 6:00 மணி முதல் அதிரடி சோதனை நடத்தினர்.
ரவுடிகள் வீடுகளில் இருந்து ஆயுதங்கள், மதுபானங்கள், போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டன. பொது மக்கள் அமைதியை கெடுக்கும் செயலில் ஈடுபட கூடாது என்று ரவுடிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
வாலை நறுக்குவேன்
பெங்களூரு கிழக்கு போலீஸ் கமிஷனர் ஹர்ஷா, ஹென்னுாரில் உள்ள ரவுடி கிஷோர் வீட்டிற்கு சென்றார். கிஷோரை அழைத்து, ‘என்ன வேலை பார்க்கிறாய்; இனி உன் மீது எந்த புகாரும் வரக்கூடாது; வாலை ஆட்டினால் ஒட்ட நறுக்கி விடுவேன்; மாதத்திற்கு நான்கு முறை எனது அலுவலகத்தில் வந்து என்னை சந்திக்க வேண்டும்; மக்களை தொந்தரவு செய்தால் சும்மா விட மாட்டேன்’ என்று கடுமையாக எச்சரித்தார்.
இன்னொரு ரவுடியின் வீட்டிற்கு ஹர்ஷா சென்ற போது அங்கிருந்த ரவுடியின் தாய், ஹர்ஷாவை பார்த்து பயந்தார். அப்போது ஹர்ஷா, ‘அம்மா, உங்களை ஒன்றும் செய்ய மாட்டேன். உங்கள் மகன் அயோக்கியன். பொதுமக்களுக்கு தொந்தரவு தருகிறான். அவனை ஒழுங்காக இருக்க சொல்லுங்கள். அயோக்கியத்தனம் செய்தால் அவனை கைது செய்து சிறையில் தள்ளுவேன்’ என எச்சரிக்கை விடுத்தார்.
குண்டர் சட்டம்
சோதனைக்கு பின் ஹர்ஷா கூறியதாவது:
பொது மக்களுக்கு தொந்தரவு கொடுக்கும் ரவுடிகள் மீது, தயவுதாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்க, எங்களுக்கு உத்தரவு வந்துள்ளது. ரவுடிகளை பட்டியலிட்டு உள்ளோம்.
கொலை, மிரட்டி பணம் பறிப்பு, ஆள்கடத்தல் போன்ற செயலில் ஈடுபடும் ரவுடிகள் பெயர்கள், முதல் பட்டியலில் உள்ளது. சோதனை இன்றுடன் நின்று விடாது.
சட்டத்திற்கு உட்பட்டு நடக்கும் ரவுடிகளை நாங்கள் எதுவும் செய்ய மாட்டோம். சட்டத்தை மீறுபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும். மாவட்டத்தை விட்டு வெளியேற்றுவோம். ரவுடிகளை ஒடுக்க கோகா சட்டத்தையும் பயன்படுத்துவோம்.
கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் யார், யார் வசிக்கின்றனர் என வீடு, வீடாக சென்று தகவல் சேகரிக்க உள்ளோம். முதியவர்கள் பாதுகாப்பில் அதிக அக்கறை செலுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
சாலையில் கழிவு நீர் தேக்கம்: மக்கள் அவதி
-
நவக்கரை ஏ.ஜே.கே. கல்லூரியில் பள்ளிகளுக்கிடையே விளையாட்டு போட்டி
-
தரைப்பாலத்தில் வளைந்த இரும்பு வலை
-
கர்நாடகாவில் இன்று முதல் நவ., 28 வரை மழைக்கு வாய்ப்பு
-
அரசு பஸ்களுக்கு உதிரிபாகங்கள் வாங்கியதில் ரூ.4 கோடி ஊழல்
-
அதிமுக தொண்டனான என் பேச்சை கேளுங்களேன்!: பழனிசாமிக்கு வேலுமணி மீண்டும் பதில்