மூன்று சிறுவர் பூங்காவை பராமரித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகராட்சியில் கட்டியுள்ள, 3 சிறுவர் பூங்காவை பராமரித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி நகராட்சி மோகன்ராவ் காலனி மற்றும் ஜக்கப்பன் நகர் நான்காவது கிராஸில் கடந்த, 2018ல், தலா, 10 லட்சம் ரூபாய் மதிப்பில், 2 சிறுவர் பூங்கா நகராட்சி சார்பில் கட்டப்பட்டது. இதை அப்பகுதியில் உள்ள சிறுவர்கள் மட்டுமின்றி மாலை நேரங்களில் பொழுதுபோக்கிற்காக பெரியவர்களும் பயன்படுத்தி வந்தனர். இரண்டு சிறுவர் பூங்காவும் கடந்த, 5 ஆண்டுகளாக பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பூங்கா முழுவதும் புதர் மண்டி கிடக்கிறது. இரவில் பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துகள் நடமாடுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.
இதேபோல், கிருஷ்ணகிரி பழையபேட்டை, 4வது வார்டு ஆசிப் நகரில் கடந்த, 2023ல் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில், 19 லட்சம் ரூபாய் மதிப்பில், 2 கழிப்பறைகள், ஒரு அறை மற்றும் விளையாட்டு உபகரணங்கள், நடைபாதையுடன் சிறுவர் பூங்கா அமைத்தனர். ஆனால் இதுவரை பயன்பாட்டிற்கு திறக்காததால், சிறுவர் பூங்கா முழுவதும் புதர் மண்டியுள்ளது. கழிப்பறை அறைகள், மின் சாதனங்கள் சேதம் அடைந்துள்ளன. 19 லட்சம் ரூபாய் செலவிட்டு கட்டிய சிறுவர் பூங்காவை பயன்பாட்டிற்கு திறக்காமலேயே வீணாகியுள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
எனவே, 3 சிறுவர் பூங்காவையும் பராமரித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement