போச்சம்பள்ளியில் மண் கடத்தல் ஜோர் அதிகாரிகள் நடவடிக்கைக்கு கோரிக்கை

கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி சுற்றுவட்டாரத்தில் பகல் நேரத்திலேயே மண் கடத்தல் ஜோராக நடப்பதாகவும், அதிகாரிகள் கண்டும் காணாமல் இருப்பதாகவும், குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களான குள்ளனுார், ஆமணக்கம்பட்டி, ஜிம்மாண்டியூர், களர்பதி, கரடியூர், பாப்பாபரப்பட்டி, மடத்தானுார் உள்ளிட்ட பகுதி ஏரிகளில், பொக்லைன் மற்றும் டிராக்டர் மண் கடத்தல் ஜோராக நடக்கிறது. கடந்த, 12ல், குள்ளனுார் ஏரியில் பொக்லைன் இயந்திரங்கள் மற்றும், 25 டிராக்டர்கள் மூலம், பகல் நேரத்திலேயே மண் கடத்தல் நடந்துள்ளது. அங்கு சென்ற பொதுமக்கள், அவர்களை தடுத்து நிறுத்திய போது, மண் கடத்தல் கும்பல் தப்பியது. மக்கள், போச்சம்பள்ளி தாசில்தாரிடம் புகார் அளித்துள்ளனர். ஆனால் தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களிலும் பல பகுதிகளில் மண் திருட்டு நடப்பதாவும், இது குறித்து கேட்டால் அதிகாரிகளிடம் அனுமதி வாங்கி விட்டோம் எனவும் கூறுகின்றனர். குள்ளனுார் ஏரியலிருந்து கடத்தப்படும் மண், தனியார் நிலங்களில் கொட்டப்பட்டு, கட்டுமானப்பணிகள் நடக்கும் இடத்திற்கு விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் கண்டும், காணாமல் இருந்து வருவதாகவும், மாவட்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement