கோல் கீப்பராக ஜிடேன் மகன் * அல்ஜீரிய அணிக்கு மாறியது ஏன்

உலக கோப்பை கால்பந்து தொடரில் ஜிடேன் மகன் லுாகா, அல்ஜீரிய அணி கோல் கீப்பராக களமிறங்கினார்.
பிரான்ஸ் முன்னாள் கால்பந்து வீரர் ஜினடின் ஜிடேன் 53. மொத்தம் 108 போட்டியில் 31 கோல் அடித்தார். 1998, 2002, 2006 என மூன்று உலக கோப்பை தொடரில் பங்கேற்றார்.
சொந்தமண்ணில் பிரான்ஸ் (1998) உலக கோப்பை வென்ற அணியில் இடம் பெற்றார். கடந்த 2006ல் நடந்த பைனலில் இத்தாலியின் மாட்டராச்சியை முட்டித் தள்ள, 'ரெட் கார்டு' வாங்கி வெளியேறினார். இதன் பின் ஓய்வு பெற்றார்.
இவரது மகன் லுாகா ஜிடேன் 27. பிரான்சின் மார்செய்லியில் பிறந்த லுாகா, கோல் கீப்பராக உள்ளார். 20 வயதுக்குட்பட்ட பிரான்ஸ் அணியில் விளையாடியுள்ளார்.
எனினும் தந்தை வழி தாத்தா-பாட்டி வழியில் அல்ஜீரியா, தந்தையின் தாயார் வழியாக ஸ்பெயின் என இரு அணிக்கும் பங்கேற்கும் வாய்ப்பு வந்தது.
ஆனால், லுாகா அல்ஜீரிய அணிக்கு மாறினார். கன்சாஸ் சிட்டியில் நடந்த அர்ஜென்டினாவுக்கு எதிரான போட்டியில் லுாகா, தனது முதல் உலக கோப்பை போட்டியில் அறிமுகம் ஆனார். சர்வதேச அரங்கில் இது, அல்ஜீரிய அணிக்காக 8வது போட்டி ஆனது. இதைக் காண நேரில் வந்திருந்தார் லுாகா தந்தை ஜிடேன். எனினும் 'ஜாம்பவான்' மெஸ்ஸி, 3 கோல் அடிக்க, லுாகாவின் உலக கோப்பை அறிமுகம் சோகத்தில் முடிந்தது.

இரண்டாவது முறை
ஜிடேன்-லுாகா ஜோடி உலக கோப்பை கால்பந்தில் விளையாடிய 27 தனது தந்தை-மகன் ஜோடி ஆனது. எனினும் வெவ்வேறு நாடுகளுக்காக விளையாடிய இரண்டாவது ஜோடி ஆகினர்.
முன்னதாக 1994ல் மசினோ, பிரேசில் அணிக்காக விளையாடினார். 2018ல் அவரது மகன் தியாகோ, ஸ்பெயின் அணியில் களமிறங்கினார்.

'மாஸ்க்' ஏன்
கடந்த ஏப்ரல் மாதம் அல்மேரியா அணிக்கு எதிரான போட்டியில் லுாகா, தாடை, கன்னத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டது. தவிர கடுமையான மூளை அதிர்ச்சியும் ஏற்பட்டது. இதனால் உலக கோப்பை தொடரில் பங்கேற்க முடியாத அபாயம் ஏற்பட்டது. பின் ஆப்பரேஷன் செய்து மீண்டு வந்தார். மறுபடியும் காயம் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், போட்டி முழுவதும் லுாகா 'மாஸ்க்' அணிந்து இருந்தார்.