விரக்தியில் வெளியேறிய ரொனால்டோ

ஹூஸ்டன்: அமெரிக்காவின் ஹூஸ்டனில் நடந்த போட்டியில் உலகின் 'நம்பர்-5' போர்ச்சுகல், 46 வது இடத்திலுள்ள காங்கோ அணிக்கு எதிராக 1-1 என 'டிரா' செய்தது. நடப்பு தொடரில் உலகின் முன்னணி வீரர் மெஸ்ஸி (3 கோல்), எம்பாப்வே (2), எர்லிங் ஹாலண்ட் (2), ஹாரி கேன் (2), வினிசியஸ் (1) என பலரும் முதல் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு, கோல் கணக்கைத் துவக்கிவிட்டனர்.
இதனால் ரொனால்டோ மீது எதிர்பார்ப்பு எகிறியது. போட்டியில் பெரும்பாலும் (75%) பந்து போர்ச்சுகல் அணி கட்டுப்பாட்டில் தான் இருந்தது. ஆனால் மூன்று முறை மட்டும் கோல் 'ஷாட்' அடித்தார் ரொனால்டோ. இது எதுவும் காங்கோ கோல் கீப்பர் எம்பாசிக்கு தொல்லை தரவில்லை. சக வீரர்களுக்கு கோல் வாய்ப்பும் ஏற்படுத்தி தரவில்லை.
41 வயதான ரொனால்டோ, 90 நிமிடம் முழுவதும் விளையாடிய போதும், 25 முறை தான் பந்தை பெற்று, கொண்டு சென்றார். முக்கிய போட்டியில் ரொனால்டோ இவ்வளவு மோசமாக செயல்பட்டது, வியப்பை ஏற்படுத்தியது. போட்டி முடிந்ததும், சக வீரர்கள் எல்லாம் மைதானத்தில் இருக்க, ரொனால்டோ மட்டும் தனியாக விரக்தியுடன் வெளியேறினார்.
முன்னாள் அயர்லாந்து வீரர் டோனி காஸ்கரினோ கூறுகையில்,'' ரொனால்டோவிடம் பழைய வேகம் இல்லை. பந்தை எடுத்துக் கொண்டு எதிரணியினரை ஊடுருவிச் செல்லும் திறன் இல்லை. அவருக்கு வயதாகி விட்டது. ஆனால் பயிற்சியாளர் மார்டினெஸ், தொடர்ந்து ரொனால்டோவை மைதானத்தில் ஏன் வைத்திருக்கிறார் எனத் தெரியவில்லை,'' என்றார்.

10 போட்டி, 'நோ' கோல்
ரொனால்டோ சர்வதேச அரங்கில் முக்கிய போட்டிகளில் கோல் அடிக்காமல் ஏமாற்றுகிறார். 2024 யூரோ தொடரின் 3 லீக், 'ரவுண்டு-16', காலிறுதி என 5 போட்டியில், 90 நிமிட நேரத்தில் ஒரு கோல் கூட அடித்தது இல்லை. யூரோ, உலக கோப்பை தொடர் என ரொனால்டோ பங்கேற்ற கடைசி 10 போட்டிகளில் எந்த ஒரு கோலும் அடிக்கவில்லை.

ஹாலண்ட் அபாரம்
அர்ஜென்டினாவின் மெஸ்சி, அல்ஜீரியாவுக்கு எதிராக 57 முறை பந்தை 'டச்' செய்தார். இதில் 3 கோல் அடித்தார். செனகலுக்கு எதிராக எம்பாப்வே, 37 'டச்' செய்து, 2 கோல் அடித்தார். உலக கோப்பை அறிமுக போட்டியில் நெதர்லாந்தின் ஹாலண்ட், 20 முறை மட்டும் பந்தை 'டச்' செய்தாலும், 2 கோல் அடித்து அசத்தினார்.