'அர்னால்டு' கணிப்பு எப்படி * இங்கிலாந்து நிலை என்ன

உலக கோப்பை கால்பந்து தொடர் வந்து விட்டால் போதும். உலகம் முழுவதும் பல்வேறு விலங்கினங்களை வைத்து யார் வெற்றி பெறுவர் என கணிக்கத் துவங்கி விடுவர். கடந்த 2010ல் 'பால்' என்ற ஆக்டபஸ் போட்டியின் முடிவுகளை முன்னதாக கணித்தது. பைனலில் ஸ்பெயின் வெல்லும் என துல்லியமாக கணித்தது.
தவிர நீர் நாய், கோலா கரடி என பல விலங்குகளுடன், கிளியும் கணித்தது. இந்த வரிசையில் 2026ல் எறும்பு திண்ணி வகையை சேர்ந்த 'அர்னால்டு' என்ற ஆர்மெடில்லோ (சிறிய கவசம் அணிந்தது போன்ற உயிரினம்) இணைந்துள்ளது.
உடல் முழுவதும் தோலால் ஆன ஓடு, பள்ளம் தோண்டுவதற்கு ஏற்ப கூர்மையான நகங்கள் உள்ளன. குட்டையாக இருந்தாலும் வேகமாக ஓடும் இவை, தென், மத்திய, வட அமெரிக்காவில் காணப்படுகிறது.
இங்கிலாந்தின் பிரிஸ்டலில் உள்ள வன விலங்குகள் காட்சியகத்தில் 5 வயதுடைய அர்னால்டு, எர்னி என்ற பெயருடைய இரண்டு 'ஆர்மெடில்லோ' உள்ளன. இதில் அர்னால்டுக்கு ஒருவித மனோசக்தி உள்ளதாம். சமீபத்தில் எப்.ஏ., கோப்பை பைனலில் மான்செஸ்டர் சிட்டி அணி, செல்சி அணியை வீழ்த்தும் என சரியாக கணித்தது.
தற்போது உலக கோப்பை தொடர் லீக் சுற்றில் இங்கிலாந்து அணி பங்கேற்கும் போட்டிகளின் முடிவுகளை கணித்துள்ளது.
இதற்காக இரண்டு கால்பந்து வடிவ பொருளை வைத்து, அதற்கும் புழுக்களை வைக்கின்றனர். அங்கு வரும் 'அர்னால்டு' எந்த பந்தில் உள்ள புழுக்களை சாப்பிடுகிறதோ அந்த அணி வெல்லுமாம்.
இதன்படி,
* முதல் போட்டியில் இங்கிலாந்து, குரோஷியாவை வெல்லும்.
* அடுத்து கானாவிடம் தோற்கும்.
* மூன்றாவது போட்டியில் பனாமாவை வீழ்த்தும்.
லீக் சுற்றில் 3ல் 2 வெற்றி பெறும் என கணித்துள்ளது.