உற்சாகமான 'இந்தியா ஹவுஸ்'

துப்பாக்கி சுடுதலில் பதக்கம் வென்ற கையோடு 'இந்தியா ஹவுஸ்' நோக்கி ஓடோடி வந்துள்ளார் சரப்ஜோத் சிங். 'ப்ளீஸ்' சாப்பிட ஏதாவது கொடுங்கள்' என பரிதாபமாக கேட்டுள்ளார். இவருக்கு வாய்க்கு ருசியாக இந்திய வகை உணவுகள் சுடச்சுட பரிமாறப்பட்டன.

பாரிஸ் ஒலிம்பிக் கிராம அறைகளில் 'ஏசி' வசதி இல்லாததல் வீரர்கள் சிரமப்படுகின்றனர். 'பீட்சா', 'பர்கர்' போன்ற ஐரோப்பிய வகை உணவு வழங்கப்படுவதால் நமது நட்சத்திரங்கள் திண்டாடுகின்றனர். இவர்களது தேவையை பூர்த்தி செய்ய, ஒலிம்பிக் கிராமத்தில் இருந்து 9 கி.மீ., தொலைவில் பார் டி லா வில்லட் பகுதியில் 'இந்தியா ஹவுஸ்' அமைந்துள்ளது. இங்கு இந்திய ஒலிம்பிக் சங்கம், ரிலையன்ஸ் அறக்கட்டளை இணைந்து அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்துள்ளன. ரிலையன்ஸ் நிறுவனத்தின் லண்டன் ஸ்டோக் பார்க் ஓட்டலின் சமையல் நிபுணர்கள், இந்திய சமையல் கலைஞர்கள் சேர்ந்து மட்டன் பிரியாணி முதல் தயிர் சாதம் வரையிலான இந்திய வகை உணவுகளை தயார் செய்கின்றனர்.


பதக்கம் வெல்லும் இந்திய நட்சத்திரங்களுக்கு பாராட்டு விழா நடத்தி கவுரவிக்கின்றனர். காலையில் நடக்கும் 'யோகா' வகுப்பில் பிரெஞ்ச், இந்தியர்கள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கின்றனர். இந்திய பாரம்பரியத்தை விளக்கும் ஓவியங்கள், இந்திய சுற்றுலா தலங்கள், பாலிவுட் நடன முறை, மருதாணி ஓவியம், டாட்டூ வரைவது என பல வகுப்புகள் நடக்கின்றன. இந்திய இசை கலைஞர்களின் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடக்கிறது.

இங்கு வந்த சரப்ஜோத் சிங்கிற்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இவர், மனு பாக்கருடன் சேர்ந்து துப்பாக்கி சுடுதலில் (10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு பிரிவு) வெண்கலம் வென்றார். இவருடன் ரசிகர்கள் 'செல்பி' எடுத்குக் கொண்டனர். உங்களுக்கு என்ன வேண்டும்... என கேட்டுள்ளனர். அதற்கு 'ஏதாவது இந்திய வகை உணவு சாப்பிட கொடுங்களேன்' என பதில் கொடுத்துள்ளார். உடனே, பாணி பூரி, பேல் பூரி, தோசை வகைககள் பரிமாறப்பட்டுள்ளன. பின் இந்தியக் குழுவினர் 'நாட்டு -நாட்டு' பாடலுக்கு ஆட்டம் போட்டு மகிழ்ந்துள்ளனர்.


இது குறித்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் உறுப்பினரும் ரிலையன்ஸ் அறக்கட்டளை தலைவருமான நீட்டா அம்பானி கூறுகையில்,''நமது வீரர்களின் வெற்றியை 'இந்தியா ஹவுசில்' கொண்டாடுகிறோம். அவர்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறோம். இந்தியாவின் பெருமையை உலகிற்கு உணர்த்துகிறோம்,'' என்றார்.

Advertisement