குத்துச்சண்டையில் பாலின சர்ச்சை

பாரிஸ்: ஒலிம்பிக் குத்துச்சண்டையில் பாலின சர்ச்சை வெடித்துள்ளது. பாலின புகாரில் சிக்கிய இமேன் கெலிப் விட்ட குத்தில் நிலைகுலைந்த ஏஞ்சலா கரினி, 46 வினாடியில் போட்டியில் இருந்து விலகினார்.
பாரிஸ் ஒலிம்பிக் பெண்கள் குத்துச்சண்டை 'ரவுண்ட்-16' போட்டியில் (66 கிலோ) இத்தாலியின் ஏஞ்சலா கரினி 25, அல்ஜிரியாவின் இமேன் கெலிப், 25 மோதினர். கெலிப் சரமாரியாக குத்துவிட, ஏஞ்சலா தடுமாறினார். 46 வினாடிகள் மட்டும் தாக்குப்பிடித்த இவர், போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். கெலிப் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இவருடன் கைகுலுக்காமல் சென்ற ஏஞ்சலா, குத்துச்சண்டை கோதாவில் அமர்ந்தவாறு கதறி அழுதார்.

குத்துச்சண்டை களத்தில் 'புலி' என அழைக்கப்பட்ட ஏஞ்சலாவின் முடிவு அதிர்ச்சி அளித்தது. ஆண் தன்மை அதிகம் கொண்ட இமேன் கெலிப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே, பாதியில் விலகியதாக கருதப்படுகிறது.
வலுவான குத்து: ஏஞ்சலா கூறுகையில்,''இமேன் கெலிப் உடன் மோதியது கடின அனுபவம். என் வாழ்நாளில் இந்த அளவுக்கு வலிமையான குத்துகளை சந்தித்தது இல்லை. அவரது குத்தில் என் மூக்கு உடைந்து ரத்தம் வழிந்தது. முகம் முழுவதும் வலித்தது. என்னால் மூச்சுவிட முடியவில்லை. என் குடும்பத்தை நினைத்து பார்த்தேன். பாதியில் விலக முடிவு செய்தேன்.

பெண்கள் பிரிவில் இமேன் கெலிப் பங்கேற்க, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அனுமதித்துள்ளது. இந்த முடிவை மதிக்கிறேன். எனது ஒலிம்பிக் கனவு தகர்ந்த கோபத்தில் தான் அவருடன் கைகுலுக்கவில்லை. அவருக்கு எதிராக செயல்படவில்லை. மீண்டும் அவரை சந்திக்க நேர்ந்தால், கட்டி அணைத்து அன்பு காட்ட தயாராக உள்ளேன். என் செயலால் ஏற்பட்ட சர்ச்சைக்காக வருந்துகிறேன்,'' என்றார்.
ஒலிம்பிக் கமிட்டி விளக்கம்: சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி வெளியிட்ட அறிக்கையில், 'பாஸ்போர்ட்' அடிப்படையில் பாலினம், வயது முடிவு செய்யப்படுகிறது. பெண்ணாக தான் இமேன் கெலிப் பிறந்தார். பெண்ணாகவே வாழ்கிறார். இவரது 'பாஸ்போர்ட்டில்' பெண் என குறிப்பிடப்பட்டுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் (2021) உட்பட பல போட்டிகளில் பெண்கள் குத்துச்சண்டை பிரிவில் பங்கேற்றார்,' என தெரிவித்துள்ளது.

பின்னணி என்ன
டில்லி, உலக குத்துச்சண்டை போட்டியின் (2023) போது நடந்த பாலின சோதனையில் இமேன் கெலிப், தைவானின் லின் யூ--டிங் என இரு வீராங்கனைகள் தேறவில்லை. ஆண் தன்மைக்குரிய 'டெஸ்டோஸ்டிரான்' அளவு அதிகமாக இருந்ததால், 'பயோலிஜிக்கல்' ஆண் என குறிப்பிடப்பட்டனர். இருவரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இவர்களுக்கு பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டது. பெண்களுக்கான குத்துச்சண்டையில் பங்கேற்பதால், சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

பிரதமர் ஆதரவு
ஏஞ்சலா கரினிக்கு ஆதரவு குரல் எழுப்பிய அமெரிக்க நீச்சல் வீராங்கனை ரைலி கெய்ன்ஸ்,' பெண்கள் விளையாட்டில் ஆண்களுக்கு என்ன வேலை' என சமூகவலைதளத்தில் கேள்வி எழுப்பினார். இதற்கு 'டெஸ்லா' நிறுவனர் எலான் மஸ்க் உள்ளிட்ட பல பிரபலங்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.


இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி கூறுகையில்,''ஆண் தன்மை கொண்டவர்களை பெண்கள் விளையாட்டில் பங்கேற்க அனுமதிக்க கூடாது. பெண்களின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்,'' என்றார்.

அல்ஜிரிய ஒலிம்பிக் கமிட்டி வெளியிட்ட செய்தியில்,''இமேன் கெலிப்பிற்கு எதிராக ஆதாரமற்ற புகாரை சில 'மீடியா' வெளியிடுகின்றன. அவரை குறி வைத்து பொய்யான செய்தி பரப்பப்படுகிறது,' என தெரிவித்துள்ளது.

Advertisement