'தங்க மகன்' லியான் மர்சந்த்: ஒலிம்பிக் நீச்சலில் அசத்தல்

பாரிஸ்: இரண்டு மணி நேரத்தில் இரண்டு தங்கம்; மூன்று நாளில் மொத்தம் நான்கு தங்கம் என தங்க மழையில் நனைகிறார் லியான் மர்சந்த். ஒலிம்பிக் நீச்சலில் 'தங்கமீனாக' ஜொலிக்கும் இவர், பிரான்ஸ் தேசத்தின் புதிய 'ஹீரோ'வாக உருவெடுத்துள்ளார்.

பாரிஸ் ஒலிம்பிக் நீச்சலில் இளம் லியான் மர்சந்த், 22, அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளார். 400 மீ.. தனிநபர் மெட்லே பிரிவில் (4:02.95 வினாடி) அமெரிக்க நீச்சல் ஜாம்பவான் மைக்கேல் பெல்ப்ஸ் (4:03.84) ஒலிம்பிக் சாதனையை தகர்த்து முதல் தங்கம் வென்றார். பின் 200 'பட்டர்பிளை' பிரிவில் பங்கேற்றார். துவக்கத்தில் தடுமாறிய போதும், கடைசி 50 மீ., துாரத்தை மின்னல் வேகத்தில் நீந்தி தங்கம் (1:51.21 வினாடி) வென்றார். தொடர்ந்து 200 மீ., 'பிரஸ்ட்ஸ்டிரோக்' பிரிவில் எவ்வித சோர்வும் இல்லாமல் கலந்து கொண்டார். ஒரு வினாடி வித்தியாசத்தில் முதலிடம் (2:05.85) பெற்று, இரண்டு மணி நேரத்தில் இன்னொரு தங்கம் வென்றார். அடுத்து 200 மீ., தனிநபர் மெட்லே பிரிவில் (1.54.06) தனது நான்காவது தங்கத்தை கைப்பற்றினார். பங்கேற்ற நான்கு பிரிவிலும் நான்கு தங்கத்தை ஒலிம்பிக் சாதனையுடன் வென்றது கூடுதல் சிறப்பு.

நீச்சல் குடும்பம்

பிரான்சின் டவுலுாசில் பிறந்த லியானின் 'ஜீனில்' நீச்சல் கலந்துள்ளது. இவரது அப்பா சேவியர், அம்மா செலின் என இருவரும் ஒலிம்பிக் நீச்சலில் பங்கேற்றவர்கள். லியானை பொறுத்தவரை இளம் பருவத்தில் நீச்சல் குளம் பக்கமே செல்லமாட்டார். தண்ணீர் குளிராக இருக்கும் என பயப்படுவாராம். ஆரம்பத்தில் ஜூடோ, ரக்பி விளையாடினார். 'கம்ப்யூட்டர் புரோகிராமிங்' மாணவரான இவர், 'வீடியோ' கேம்சில் ஆர்வம் கொண்டவர். பைலட்டாக பறக்க விரும்பினார். யாரிடமும் அதிகம் பேச மாட்டார். 'டீன் ஏஜ்' பருவத்தில் பெற்றோரை போல நீச்சலில் குதித்தார். 19 வயதில் அமெரிக்கா சென்ற இவர், பெல்ப்ஸ், அவரது பயிற்சியாளர் பாப் பாவ்மேனிடம் நீச்சலின் நுணுக்கங்களை கற்று தேர்ந்தார்.

தற்போது நீச்சசல் அரங்கில் உச்சம் தொட்டுள்ளார். இவரை 'கிங் லியான்,' 'பாதி மனிதர்; பாதி டால்பின்' என வர்ணிக்கின்றனர். ஒலிம்பிக் அரங்கில் இவரது பெயரை உச்சரித்த போதெல்லாம், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான் உட்பட ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

பெருமையான தருணம்
லியான் மர்சந்த் கூறுகையில்,''பெற்றோர் என் மீது நீச்சலை திணிக்கவில்லை. இம்முறை உள்ளூரில் ஒலிம்பிக் நடந்ததால், நெருக்கடி அதிகமாக இருந்தது. நான்கு தங்கம் வென்றது பெருமையான தருணம். என்னை பெல்ப்ஸ் உடன் ஒப்பிடும் போது மகிழ்ச்சியாக இருக்கும். அவர் பெரிய ஜாம்பவான். நீச்சலில் புரட்சி ஏற்படுத்தியவர்,'' என்றார்.

முதல் வீரர்
லியான் மர்சந்த் நிகழ்த்திய சில சாதனைகள்.
* ஒரே ஒலிம்பிக்கில் நான்கு தங்கம் வென்ற முதல் பிரான்ஸ் நீச்சல் வீரர்.
* ஒரே ஒலிம்பிக் தனிநபர் நீச்சலில் நான்கு தங்கம் வென்ற நான்காவது வீரர். இதற்கு முன் அமெரிக்காவின் பெல்ப்ஸ்(2004ல் 4, 2008ல் 5) மார்க் ஸ்பிட்ஸ்(1972ல் 4), ஜெர்மனியின் கிறிஸ்டன் ஓட்டோ(1988ல் 4) சாதித்தனர்.
* ஒரே நாளில் தனிநபர் பிரிவில் இரண்டு தங்கம்(200 'பட்டர்பிளை', 200 மீ., 'பிரஸ்ட்ஸ்டிரோக்') வென்ற நான்காவது வீரர். இதற்கு முன் கார்னிலியா என்டர், பிரடரிக் லேன், ஆல்பிரட் ஹாஜோஸ் சாதித்தனர்.

நாடாக இருந்தால்
பாரிஸ் ஒலிம்பிக்கில் பல நாடுகள் ஒரு தங்கம் கூட வெல்ல முடியாமல் திண்டாடுகின்றன. லியான் மர்ச்சந்த் தனிநபராக நான்கு தங்கம் வென்றிருக்கிறார். தங்கத்தின் அடிப்படையில் தான் பதக்கப்பட்டியல் முடிவு செய்யப்படும். லியானை ஒரு நாடாக பார்த்தால், 'டாப்-10' பட்டியலில் இடம் பெற்றிருப்பார்.

பெல்ப்ஸ் பாராட்டு
ஒலிம்பிக் நீச்சலில் 28 பதக்கம் வென்ற பெல்ப்ஸ் கூறுகையில்,''ஒலிம்பிக் சாதனையுடன் லியான் மார்சந்த், நான்கு தங்கம் வென்றது மகத்தான விஷயம்,''என்றார்.
நீச்சல் பயிற்சியாளர் பாப் பவ்மேன் கூறுகையில்,''நீச்சலில் சாதிக்க தேவையான வேகம், பொறுமை லியானிடம் இருக்கிறது. பதட்டமான நேரத்தில் 'கூலாக' செயல்படுவது இவரது பலம். இளம் வீரர் என்பதால், இன்னும் பல சாதனைகள் படைப்பார்,''என்றார்.

Advertisement