ஆஸி., ஹாக்கி வீரர் கைது

பாரிஸ்: போதைப்பொருள் வாங்க முயற்சித்த ஆஸ்திரேலிய ஹாக்கி வீரர் தாமஸ் கிரெய்க் கைது செய்யப்பட்டார்.
ஒலிம்பிக் ஹாக்கியில் ஆஸ்திரேலிய அணி பங்கேற்றது. 52 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவிடம் தோற்றது. இந்த அணியின் முன்னணி வீரர் தாமஸ் கிரெய்க் 28. ஆஸ்திரேலிய அணிக்காக 100க்கும் மேற்பட்ட போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
இதனிடையே, காலிறுதியில் நெதர்லாந்திடம் வீழ்ந்து, ஆஸ்திரேலியா 6வது இடம் பிடித்து வெளியேறியது. அன்றைய தினம் இரவு, பாரிஸ் தெருக்களில் தாமஸ், கோகைன் என்ற போதைப் பொருள் வாங்க முயன்றார். அப்போது பிரான்ஸ் போலீசார் அவரை கைது செய்து, 'கஸ்டடிக்கு' கொண்டு சென்றனர்.
விசாரணைக்குப் பின் நேற்று அவரை விடுவித்தனர். தாமஸ் வெளியிட்ட செய்தியில்,' கடந்த 24 மணி நேரத்தில் நடந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இதனால் எனது குடும்பம், சக அணி வீரர்கள், எனது விளையாட்டு, ஆஸ்திரேலிய ஒலிம்பிக் அணிக்கு ஏற்பட்ட அவமானத்திற்காக வருந்துகிறேன். இந்த விளைவுகளுக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்,' என தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணி தரப்பில் வெளியிட்ட செய்தியில்,' தாமஸ் ஒலிம்பிக் கிராமத்தை விட்டு வெளியேற்றப்பட்டார். இவருக்கான சலுகைகள் அனைத்தும் பறிக்கப்படும். நிறைவு விழாவில் இவர் பங்கேற்க மாட்டார்,'' என தெரிவித்துள்ளது.

Advertisement