ஸ்ரீஜேசுக்கு கொடி கவுரவம்: பாரிஸ் ஒலிம்பிக் நிறைவு விழாவில்

பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் நிறைவு விழாவில் இந்திய மூவர்ணக்கொடியை மனு பாகர், ஸ்ரீஜேஷ் ஏந்தி வரவுள்ளனர்.

பிரான்சில் நடக்கும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டி நாளை முடிகிறது. இதன் நிறைவு விழாவில் நடக்கும் அணிவகுப்பில், இந்திய மூவர்ணக்கொடியை ஏந்தி வர ஒரு வீரர், ஒரு வீராங்கனை தேர்வு செய்யப்படுவர். வீராங்கனைகள் சார்பில் பாரிஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு 2 வெண்கலம் பெற்றுத்தந்த மனு பாகர் தேர்வானார்.

வீரர்கள் சார்பில் ஈட்டி எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஹாக்கி கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் தேர்வு செய்யப்பட்டார். தனது கடைசி தொடரில் பங்கேற்ற ஸ்ரீஜேஷ், ஒலிம்பிக்கில் இந்தியா தொடர்ச்சியாக 2வது வெண்கலம் வெல்ல உதவினார். இதனையடுத்து நிறைவு விழா அணிவகுப்பில் மனு பாகர், ஸ்ரீஜேஷ் ஜோடி இந்திய மூவர்ணக்கொடியை ஏந்தி வரும் என, இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐ.ஓ.ஏ.,) சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து ஐ.ஓ.ஏ., தலைவர் பி.டி. உஷா கூறுகையில், ''நிறைவு விழாவில் ஹாக்கி கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் மூவர்ணக்கொடியை ஏந்தி வருவது குறித்து நீரஜ் சோப்ராவிடம் தெரிவித்தேன். அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார். ஒருவேளை நீங்கள் என்னை தேர்வு செய்திருந்தால், ஸ்ரீஜேசுக்கு வாய்ப்பு வழங்கும்படி வலியுறுத்தியிருப்பேன்,'' என்றார்.

Advertisement