இந்திய அணி முன்னிலை * கான்பூர் டெஸ்டில் கலக்கல்

கான்பூர்: கான்பூர் டெஸ்டில் இந்திய அணி மின்னல் வேகத்தில் ரன்குவிப்பை வெளிப்படுத்தி வருகிறது.
இந்தியா வந்துள்ள வங்கதேச அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் இந்தியா வென்றது. இரண்டாவது போட்டி உ.பி.,யில் உள்ள கான்பூர், கிரீன்பார்க் மைதானத்தில் நடக்கிறது.
வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 107 ரன் எடுத்திருந்தது. 35 ஓவர்கள் மட்டும் வீசப்பட்ட நிலையில், மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் பாதியில் ரத்தானது. மோமினுல் ஹக் (40), முஷ்பிகுர் (6) அவுட்டாகாமல் இருந்தனர்.
தொடர்ந்து இரண்டு, மூன்றாவது நாள் ஆட்டமும் ரத்தானது. இன்று நான்காவது நாள் ஆட்டம்.
பும்ரா 'மூன்று'
இந்திய பவுலர்கள் துவக்கத்தில் இருந்தே சிறப்பாக செயல்பட்டனர். முதலில் முஷ்பிகுர் ரகிமை (11) போல்டாக்கினார் பும்ரா. பின் வந்த லிட்டன் தாசை (13) சிராஜ் அவுட்டாக்கினார். சாகிப் அல் ஹசன் (9), அஷ்வின் சுழலில் சிக்கினார். மீண்டும் மிரட்டிய பும்ரா, இம்முறை மெஹிதி ஹசன் (20), தய்ஜுல் (5) என இருவரையும் வெளியேற்றினார்.
ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்திய மோமினுல் ஹக் சதம் விளாசினார். கடைசியில் காலேத் அகமது (1) ஜடேஜா சுழலில் சரிந்தார். வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 233 ரன்னுக்கு ஆல் அவுட்டானாது. இந்தியாவின் பும்ரா 3, சிராஜ் 2, ஆகாஷ் 2, அஷ்வின் 2 விக்கெட் சாய்த்தனர்.
ஜெய்ஸ்வால் மிரட்டல்
இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால் ஜோடி வேகமான துவக்கம் கொடுத்தது. ரோகித் 23 ரன்னில் அவுட்டானார். ஜெய்ஸ்வால் 51 பந்தில் 72 ரன்னில் அவுட்டானார். சுப்மன் கில் 39, ரிஷாப் பன்ட் 9 ரன் எடுத்தனர். ராகுல் அரைசதம் எட்டினார்.
கோலி 47 ரன் எடுத்தார். இந்திய அணி முதல் இன்னிங்சில் 269/6 ரன் எடுத்து 36 ரன் முன்னிலை பெற்றிருந்தது.

Advertisement