ஜம்மு காஷ்மீர் தேர்தலில் 'பைனல்'! ஒரே மாவட்டம், ரெடியாகும் 5 லட்சம் வாக்காளர்கள்

1

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் இறுதிக்கட்ட தேர்தலுக்காக கதுவா மாவட்டத்தில் 704 ஓட்டுப்பதிவு மையங்கள் தயார் நிலையில் உள்ளன.



ஜம்மு காஷ்மீரில் மொத்தமுள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. 2 கட்ட ஓட்டுப்பதிவு முடிந்து விட்ட நிலையில் நாளை (அக்.1)இறுதி மற்றும் கடைசி கட்ட ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது.

தேர்தல் பிரசாரமும் நேற்றுடன் முடிந்துவிட்ட நிலையில் ஓட்டுப்பதிவுக்கான பணிகள் சுறுசுறுப்படைந்துள்ளன. 3ம் கட்ட ஓட்டுப்பதிவு 40 தொகுதிகளில் நடக்கிறது. அதில் 6 தொகுதிகள் கதுவா மாவட்டத்தின் கீழ் வருகிறது. இந்த மாவட்டத்தில் உள்ள பனி, பில்லாவர், ஜஸ்ரோட்டா உள்ளிட்ட 6 தொகுதிகளை சேர்ந்த 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற உள்ளனர்.

ஓட்டுப்பதிவை ஜனநாயக முறையில் நேர்மையாக நடத்தும் வகையில் கதுவா மாவட்டத்தில் மொத்தம் 704 ஓட்டுப்பதிவு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. ஓட்டுப்பதிவு மையங்களுக்கு தேவையான மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள், விவிபேட், அழியா மை என அனைத்து பணிகளும் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன.

ஓட்டுச்சாவடி மையங்களில் வாக்காளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளில் போலீசார் தீவிரமாக இறங்கி உள்ளனர். நாளையும் ஜம்முகாஷ்மீரில் 3 கட்ட ஓட்டுப்பதிவு முடிந்துவிடும். அனைத்து கட்ட தேர்தலில் பதிவான ஓட்டுகள் அக்டோபர் 8ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிடும்.

Advertisement