இன்பநிதி வந்தாலும் ஏத்துக்குவாங்க; அமைச்சர்களை சொல்கிறார் இ.பி.எஸ்.,

5

சேலம்: ''உதயநிதியை தொடர்ந்து இன்பநிதி வந்தால் கூட ஏற்றுக் கொள்வோம் என்று அமைச்சர்கள் சொல்கிற அளவுக்கு அடிமையாக இருக்கும் காட்சி தான் தற்போது தி.மு.க.,வில் இருக்கிறது,'' என்று இ.பி.எஸ்., கடுமையாக விமர்சித்துள்ளார்.

சேலத்தில் நிருபர்களை எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க., பொதுச்செயலாளருமான இ.பி.எஸ்., சந்தித்து அறிக்கை ஒன்றை வாசித்தார். அப்போது அவர் கூறியதாவது;


நிறைவு பெறவில்லை





தமிழகத்தில் மழைநீர் வடிகால் பணிகள் மெத்தனமாக நடைபெற்று வருகிறது. கடந்தாண்டு 90 சதவீதம் பணிகள் முடிந்துவிட்டதாக அமைச்சர் கூறினார். ஆனால் இன்று வரை அந்த பணிகள் நிறைவு பெறவில்லை. ஒரு மாதம் கழித்து வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. எனவே கும்பகர்ண தூக்கத்தில் இருந்து விழித்து, மழைநீர் வடிகால் பணிகளை அரசு விரைந்து முடிக்க வேண்டும்.


கண்டனம்





ஆட்சி அமைந்து 40 மாதங்களாகியும் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகள் முழுமையாக நடைபெறவில்லை. பணிகளை மேற்கொள்ளாத ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பணிகள் முழுமை பெறவில்லை என்றால், மழையின் போது சென்னை வெள்ளத்தில் தத்தளிக்கும், மக்கள் பாதிக்கப்படுவார்கள்.


பாதுகாப்பு





சென்னையில் மழைநீர் கால்வாய் அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து ஒருவர் பலியாகி உள்ளார். வருங்காலத்தில் இது போன்ற பள்ளங்களை சுற்றிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.


முக்கியத்துவம்





செந்தில்பாலாஜி ஜாமின் பெற்று சிறையில் இருந்து வரும்போது அவரை முதல்வர் வருக, வருக என்று வரவேற்று உன் தியாகம் பெரிது என்று கூறி உள்ளார். அவருக்கு ஸ்டாலின் முக்கியத்துவம் கொடுக்கிறார். சுப்ரீம்கோர்ட் விதித்துள்ள நிபந்தனைகளை அமைச்சர் செந்தில் பாலாஜி மீறுகிறாரா என்பதை காவல்துறை கண்காணிக்க வேண்டும். முதல்வரே முக்கியத்துவம் தரும்போது, செந்தில் பாலாஜி மீது காவல்துறை நடவடிக்கை எடுக்குமா என்ற ஐயப்பாடு எழுகிறது.

இவ்வாறு அவர் அறிக்கையை வாசித்தார்.


பேட்டி





தொடர்ந்து இ.பி.எஸ்., நிருபர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது;

தி.மு.க.,வில் மூத்த அமைச்சர்கள், அனுபவம் வாய்ந்தவர்கள், நாட்டு நடப்பு தெரிந்தவர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு எல்லாம் துணை முதல்வர் பதவி வழங்கவில்லையே? ஆனால் கருணாநிதி குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு தான் முதல்வர் பதவி கிடைக்கும் சூழல் தற்போது நிலவுகிறது.


இன்பநிதி





கருணாநிதி முதல்வராக இருந்திருக்கிறார். அவருக்கு பின் ஸ்டாலின் துணை முதல்வராக இருந்திருக்கிறார். இப்போது உதயநிதி துணை முதல்வர் ஆகி இருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் ஸ்டாலின் தலைமையில் இருக்கும் அமைச்சர்களே, 'உதயநிதி மகன் இன்பநிதி வந்தாலும் நாங்கள் ஏற்றுக் கொள்வோம்' என்று சொல்லுகிற அளவுக்கு அடிமையாக இருக்கும் காட்சி தான் தற்போது தி.மு.க.,வில் பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.


கூடுதல் ஓட்டு சதவீதம்





ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர். எங்கள் தலைமையில் இருப்பது தான் அ.தி.மு.க. கட்சி; ஒன்றாக போனது, இரண்டாக போனது என்று தயவுசெய்து பேசவேண்டாம். நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., ஒரு சதவீதம் ஓட்டு கூடுதலாக பெற்றுள்ளது.


அங்கீகாரம்





கூட்டணி பலம் குறைவாக இருந்த போதிலும் அதிக ஓட்டுக்களை பெற்றுள்ளோம். நாங்கள் தான் அ.தி.மு.க., தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்று தேர்தலை சந்தித்துள்ளோம்.

இவ்வாறு பேட்டியின் போது இ.பி.எஸ்., கூறினார்.

Advertisement