தமிழகத்தில் எத்தனை அமைச்சர்கள் மீது என்னென்ன கேஸ் இருக்கு? சாட்டையை சுழற்றியது சுப்ரீம் கோர்ட்

41

புதுடில்லி: தமிழக அமைச்சர்களில் எத்தனை பேர் மீது என்னென்ன வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது.



அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்து ஏமாற்றியதாக அப்போது அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகள் சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந் நிலையில் வழக்கின் விசாரணையை ஓராண்டுக்குள் நடத்தி முடிக்க வேண்டும், சிறப்பு அரசு தரப்பு வக்கீலை நியமிக்க கோரியும் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் இடையீட்டு மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் முந்தைய விசாரணையின் போது, வழக்கு தொடர்பான நிலவர அறிக்கையை தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் கேட்டு இருந்தனர்.

அதன் பேரில் சீலிடப்பட்ட விவர அறிக்கை ஒன்றை சென்னை ஐகோர்ட் தலைமை பதிவாளர் இன்றைய விசாரணையின் போது தாக்கல் செய்தார். அதை வாசித்து பார்த்த நீதிபதிகள் கூறியதாவது; வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்பட 2000க்கும் மேற்பட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. 600 சாட்சிகள் இருக்கின்றனர்.


மேலும் 23 எம்.பி.,எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை சிறப்பு நீதிபதி விசாரிக்க உள்ளதால் பணிச்சுமை இருக்கும். எனவே செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கின் தீவிரத்தன்மையை கருத்தில் கொண்டு அவர் தொடர்பான 3 வழக்குகளில் சிறப்பு நீதிமன்ற நீதிபதியை சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி நியமிக்க முடியுமா? அதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

யார் அந்த நீதிபதி என்பதை ஐகோர்ட் தலைமை நீதிபதியே முடிவு எடுப்பார். இதுதொடர்பான அறிக்கையை வரும் 25ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். மேலும் தமிழகத்தில் எத்தனை அமைச்சர்கள் மீது என்ன வழக்குகள் நிலுவையில் உள்ளன. அந்த விவரங்களையும் கோர்ட்டில் தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறி உள்ளனர்.

Advertisement