பஞ்சாமிர்த சர்ச்சைக்கு மன்னிப்பு கேட்டே தீரணும்! இயக்குநர் மோகனை சுளுக்கெடுத்த கோர்ட்

1

மதுரை: பழநி பஞ்சாமிர்தம் பற்றி சர்ச்சை கருத்தை வெளியிட்ட சினிமா இயக்குநர் மோகன்.ஜி., மன்னிப்பு கேட்டு நாளிதழில் விளம்பரம் வெளியிட வேண்டும் என்று மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

தமிழ் சினிமா இயக்குநராக இருப்பவர் மோகன் .ஜி. அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறி வம்பில் சிக்குபவர். அண்மையில் பழநி பஞ்சாமிர்தத்தில் ஆண்மைக்குறைவு ஏற்படுத்தும் மருந்துகள் கலக்கப்படுவதாக அவர் கூறி இருந்தார்.

அவரின் இந்த பேச்சு வைரலாக பழநி போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் முன்ஜாமின் கோரி மதுரை ஐகோர்ட் கிளையில் மோகன்.ஜி., மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி பரத சக்ரவர்த்தி பிறப்பித்த உத்தரவில் கூறி உள்ளதாவது;

மனுதாரர் வாய்ச்சொல் வீரராக இல்லாமல் ஒரு தகவலை உறுதிப்படுத்தாமல் அதை வெளியில் கூறக்கூடாது. பழநி கோயில் மீது உண்மையான அக்கறை இருந்தால் அவர் சென்று தூய்மை பணியை செய்யலாம். பஞ்சாமிர்தம் தயாரிக்கும் இடத்தில் 10 நாட்கள் சேவை செய்யலாம்.

பஞ்சாமிர்தம் பற்றி தெரிவித்த கருத்துக்கு மனுதாரர் மன்னிப்பு கேட்கவேண்டும். பிரபல தமிழ், ஆங்கில நாளிதழில் தமிழகம் முழுவதும் மன்னிப்பு விளம்பரம் ஒன்றை வெளியிட வேண்டும்.

இவ்வாறு நீதிபதி பரத சக்ரவர்த்தி தமது உத்தரவில் கூறி உள்ளார்.

Advertisement