சீனியாரிட்டி பட்டியல் ரிலீஸ்; முன்னேறினார் உதயநிதி; இடத்தை தக்க வைத்தார் துரைமுருகன்!

11

சென்னை: தமிழக அமைச்சர்களுக்கான சீனியாரிட்டி பட்டியலில், துணை முதல்வர் உதயநிதிக்கு 3ம் இடம் அளிக்கப்பட்டு உள்ளது; துரைமுருகன் இரண்டாம் இடத்தை தக்க வைத்துள்ளார்.


நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட துணை முதல்வர் பதவியேற்பு நேற்று நடந்துள்ளது. அத்துடன், தமிழக அமைச்சரவையும் மாற்றி அமைக்கப்பட்டது. 4 அமைச்சர்கள் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் செந்தில் பாலாஜி, ஆவடி நாசர் ஆகிய இருவர் ஏற்கனவே அமைச்சர்களாக இருந்தவர்கள். புதியவர்களாக கோவி. செழியன், பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

இந்நிலையில், அமைச்சரவையில் எந்த அமைச்சருக்கு எத்தனையாவது இடம் என்ற சீனியாரிட்டி பட்டியலை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.

அதில் முதலிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவர் கையாளும் துறைகள் என்ன என்பது பற்றிய விவரங்கள் இடம்பெற்றுள்ளன. 2வது இடம் கட்சியின் சீனியரும், நீர்வள அமைச்சருமான துரைமுருகனுக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

3வது இடம் துணை முதல்வராக பொறுப்பேற்ற உதயநிதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அவருக்கு அடுத்து தான் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, எ.வ.வேலு என மற்ற அமைச்சர்களுக்கு இடம் அளிக்கப்பட்டு உள்ளது.


செந்தில் பாலாஜி 21ம் இடம்





அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அமைச்சரவையில் 21வது இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் முதன்முறையாக அமைச்சர்களான பனமரத்துப்பட்டி ராஜேந்திரனுக்கு 19வது இடமும், கோவி.செழியனுக்கு 27வது இடமும் ஒதுக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே அமைச்சராக இருந்து நீக்கப்பட்டு மீண்டும் அமைச்சராகி இருக்கும் ஆவடி நாசருக்கு 29வது இடம் தரப்பட்டு உள்ளது.


முத்துசாமிக்கு 12ம் இடம்





மொத்தம் 35 பேர் கொண்ட இந்த பட்டியலில், பெண் அமைச்சர்கள் கீதா ஜீவனுக்கு 16வது இடமும், கயல்விழி செல்வராஜூக்கு கடைசி இடமும் தரப்பட்டு உள்ளது. இந்த சீனியாரிட்டி பட்டியலில், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா அமைச்சரவைகளில் அமைச்சராக இருந்த முத்துசாமி 12ம் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.


யார் என்ன வேண்டும் என்றாலும் சொல்லட்டும், எங்கள் உதயநிதி இனி அமைச்சரவையில் நம்பர் 3, ரொம்ப ஹேப்பி என்று குதூகலமாகி இருக்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்!

Advertisement