பெலாந்துறை அணைக்கட்டுக்கு வயது '148' விழா எடுக்க விவசாயிகள் கோரிக்கை

பெண்ணாடம் அடுத்த பெலாந்துறையில் வெள்ளாற்றின் குறுக்கே கடந்த 1876ல் 200.80 மீட்டர் நீளத்திற்கு ஆங்கிலேயர் ஆட்சியில், விவசாய பாசனத்திற்காக அணைக்கட்டு கட்டப்பட்டது. மழை காலங்களில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரை கிளை வாய்க்கால்கள் மூலம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள சேதுவராயன்குப்பம், ஆனந்தகுடி, டி.வி.புத்துார், ராஜேந்திரபட்டினம், பூண்டி, கொக்கரசன்பேட்டை, குணமங்கலம், வண்ணாங்குடிகாடு, நெசலுார், சேல்விழி உள்ளிட்ட பகுதிகளில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான 18 ஏரிகளுக்கு தண்ணீர் அனுப்பப்பட்டது.


இதன் மூலம் பெலாந்துறை, பாசிக்குளம், கணபதிகுறிச்சி, ஸ்ரீமுஷ்ணம், ராஜேந்திரப்பட்டிணம் உட்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில், 12 ஆயிரத்து 234 ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெறுகிறது. இந்த அணைக்கட்டு, கடந்தாண்டு ஏப்ரல் மாதம் நீர்வளம் மற்றும் நிலவள திட்ட நிதியில், ரூ. 7.85 கோடியில் புனரமைக்கப்பட்டது. பணிகள் முடிந்து தற்போது பெலாந்துறை அணைக்கட்டு கம்பீரமாக காட்சி அளிக்கிறது.



பெலாந்துறை அணைக்கட்டு பாசன விவசாயிகள் கூறுகையில், 'அணை கட்டி 148 ஆண்டுகள் ஆகிறது. கம்பீரமாக காட்சியளிக்கும் அணைக்கட்டுக்கு விழா எடுக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்து, 150வது ஆண்டில் விழா எடுத்தால் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்' என்றனர்.

Advertisement