பா.ஜ., இருப்பதால்தான் இட ஒதுக்கீடு பாதுகாப்பாக இருக்கிறது: பிரதமர் மோடி பெருமிதம்!

6

ஹசாரிபாக்: '' பா.ஜ., இருப்பதால் தான் இட ஒதுக்கீடு பாதுகாப்பாக இருக்கிறது,'' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.


ஜார்க்கண்ட் மாநிலம் ஹிசாரிபாக் நகரில் பா.ஜ., சார்பில் நடந்த பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: மாநிலத்தின் வளர்ச்சிக்காக இரவு பகல் பாராமல் மத்திய அரசு உழைக்கிறது. ஆனால், இந்த வளர்ச்சியை தடம் புரள செய்யும் முயற்சியில் மாநில அரசு ஈடுபட்டு உள்ளது. ஆளும் ஜே.எம்.எம்., காங்கிரஸ், ஆர்.ஜே.டி., ஆகியன பெரிய தடையாக உள்ளனர். மாநிலத்தில் மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே வளர்ச்சி ஏற்படும்.


ஆட்சி பறிபோவதை அறிந்து காங்கிரசும் ஜே.எம்.எம்., கட்சியும் முழு அளவில் வேகமாக ஊழல் செய்ய துவங்கி உள்ளனர். கடந்த வாரங்களில் ஆயிரக்கணக்கில் பணியிட மாற்றம் நடந்துள்ளது. இதன் மூலம் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து உள்ளனர். மாநில அரசு ஊழலில் மூழ்கி உள்ளது. மத்திய அரசின் திட்டங்களிலும் ஊழல் செய்ய அவர்கள் அஞ்சுவதில்லை. ஏழைகளுக்கு வழங்கப்படும் ரேசனிலும் அவர்கள் பணம் சம்பாதிக்கின்றனர்.

ஜார்க்கண்டில் தே.ஜ., ஆட்சி அமைந்ததும், பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். பா.ஜ., இருக்கும் வரை, இட ஒதுக்கீட்டை யாராலும் பறித்து விட முடியாது. பா.ஜ., இருப்பதால் தான் இட ஒதுக்கீடு பாதுகாப்பாக இருக்கிறது.

தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரானதாக காங்கிரஸ் உள்ளது. அவர்கள் வளர்ச்சி பெற்று விடக்கூடாது என்ற கொள்கை அடிப்படையிலேயே அக்கட்சி ஆட்சி நடத்தியது. இதனால் தான் இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் அக்கட்சி, தற்போது அதனை முடிவுக்கு கொண்டு வருவோம் என பேசுகிறது. அவர்களின் இட ஒதுக்கீட்டை பறித்து தனது சிறப்பு ஓட்டு வங்கிக்கு அளிக்க அக்கட்சி நினைக்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Advertisement