சடலமாக சொந்த ஊர் வந்த மகன்; 56 ஆண்டுக்குப்பின் கிடைத்தது உடல்; கிராமமே கண்ணீர் அஞ்சலி!

டேராடூன்: இமயமலை பகுதியில் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் 56 ஆண்டுகளுக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


நாராயண் சிங் என்பவர், இந்திய ராணுவத்தில் சிப்பாயி ஆக பணிபுரிந்து வந்தார். 1968 ம் ஆண்டு பிப்., 7 ல் இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானத்தில் 101 பேரில் ஒருவராக இவர் பயணித்தார். விமானம், இமயமலை பகுதியில் ரோஹ்டாங் கணவாய் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் உயிரிழந்தவர்களில் நாராயண் சிங்கும் ஒருவர். அப்போது நடந்த தேடுதல் பணியின் போது இவர் உட்பட சிலரின் உடல்கள் கிடைக்கவில்லை. இதனால், அவர் உயிருடன் தான் இருப்பார் என மனைவி வசந்தி தேவி உறுதியாக நம்பினார். விபத்து நடந்த சில மாதங்களில் அவர் மாயமானது குறித்து ராணுவம் நோட்டீஸ் கொடுத்தும், வசந்திதேவி தனது நம்பிக்கையை மாற்றவில்லை.


நாராயண் சிங் பல ஆண்டுகளாக ஊர் திரும்பாத காரணத்தினால் வசந்திதேவி 1973ம் ஆண்டு மறுமணம் செய்தார். அப்போதும், அவரது உடல் கிடைக்காத காரணத்தினால், முதல் கணவர் உயிருடன் இருக்க வாய்ப்பு உள்ளதாக குழந்தைகளிடமும், உறவினர்களிடமும் கூறிவந்தார். இவர் உடல்நலக்குறைவால் 2011ம் ஆண்டு காலமானார்.

இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்திய ராணுவத்தின் டோக்ரா ஸ்கவட் படையினர் இமயமலையில் பயணித்தனர். அப்போது, டாக்கா பனிப்பாறையில் சிக்கியிருந்த நாராயண் சிங் உள்ளிட்ட சிலரின் உடல்களை அவர்கள் கண்டுபிடித்து ராணுவத்திற்கு தகவல் கொடுத்தனர். ராணுவத்திடம் இருந்த ஆவணங்கள் மற்றும் குறிப்புகள் மூலம் இறந்தவர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

பிறகு உடல்கள் ஹிமாச்சல பிரதேசத்தில் இருந்து சண்டிகர் வழியே, உத்தரகண்டின் ருத்ரபிரயாக் நகருக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு நாராயண் சிங் உடலுக்கு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்களை உடலை ஊர்வலமாக எடுத்து வந்து சொந்த கிராமத்தில் தகனம் செய்தனர். இதில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். 56 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போனவர் உடல் தற்போது கிடைத்தது உறவினர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement