வெளி மாநில வியாபாரிகள் தேங்காய் கொள்முதலால் விலை உயர்வு: ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகையால் கிராக்கி

ஆண்டிபட்டி: ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகை மற்றும் வெளிமாநில வியாபாரிகள் கொள்முதல் செய்வதால் தேங்காய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் தேங்காய்க்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி வருஷநாடு, கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, போடி, கம்பம், பெரியகுளம் பகுதிகளில் தென்னை விவசாயம் அதிகம் உள்ளது.

இப்பகுதியில் விளையும் இளநீர், தேங்காய் தமிழகத்தின் பல மாவட்டங்களின் தேவைகளை பூர்த்தி செய்கிறது.

சில மாதங்களுக்கு முன் தேங்காய் விலை குறைவால் விவசாயிகள் பாதிப்பில் இருந்தனர். ஒவ்வொரு பகுதியிலும் ரூ.பல லட்சம் எண்ணிக்கையில் உரிக்காத தேங்காய்களை இருப்பு வைத்திருந்தனர்.

தேங்காய் விற்பனையில் அசல் கிடைத்தால் போதும் என்ற நிலையில் வியாபாரிகள் தொழிலை சிரமத்துடன் தொடர்ந்தனர்.

சில வாரங்களில் நிலைமை படிப்படியாக மாறியது. விநாயகர் சதுர்த்தி நாளில் இருப்பில் இருந்த தேங்காய் விற்பனை ஆயின. தற்போது தேங்காய் இருப்பு வைக்கும் நிலை இல்லை.

ஆண்டிபட்டி தேங்காய் வியாபாரி ஜெயபால் கூறியதாவது: முன் தேங்காய் எண்ணிக்கையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டன.

தற்போது எடை போட்டு விற்பதால் கிலோ ரூ.90 முதல் ரூ.150 வரை உயர்ந்துள்ளது. அளவுக்கு ஏற்ப ஒரு தேங்காய் ரூ.25 முதல் ரூ.50 வரை விலை உள்ளது.

தேனி மாவட்டத்திலிருந்து மும்பை, டில்லிக்கு அதிகளவில் தேங்காய் விற்பனைக்கு அனுப்பப்பட்டது. தற்போது பீஹார் வியாபாரிகள் தேங்காய் வாங்க அதிகம் வருகின்றனர். இவர்கள் தேங்காய்களை டன் கணக்கில் வாங்குகின்றனர். விற்பனை மந்தமானால் உரிக்காத காய்களை அடை போட்டு பக்குவப்படுத்தி கருப்பு காயாக்கி இருப்பில் வைத்து விடுவர்.

பக்குவப்படுத்திய கருப்பு காய்கள் 6 மாதம் வரை கெடாமல் இருக்கும். தற்போது பக்குவப்படுத்தாத வெள்ளைக்காய்களே அதிகம் உள்ளன.

இந்த காய்களை இரு வாரங்கள் மட்டுமே இருப்பு வைக்க முடியும். ஆயுதபூஜை, அடுத்து வரும் தீபாவளி பண்டிகையால் தேவை பல மடங்கு அதிகமாகும்.

மழை துவங்கினால் மரங்களில் பறிப்பு பாதிக்கப்படும். இதனால் தேங்காய் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது என்றார்.

Advertisement