கீழடியில் வர்ணம் தீட்டிய பானைகள் கண்டெடுப்பு


கீழடி: சிவகங்கை மாவட்டம், கீழடியில் பத்தாம் கட்ட அகழாய்வு ஜூன் முதல் நடக்கிறது. இதுவரை, ஒன்பது குழிகள் தோண்டப்பட்டு நுாற்றுக்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டு எடுக்கப்பட்டுள்ளன; 10ம் கட்ட அகழாய்வில் சுடுமண் பானைகள் அதிகளவில் கிடைத்து வருகின்றன.


தற்போதைய அகழாய்வில் மூன்று வர்ணம் தீட்டிய பானைகளும், வர்ணம் தீட்டப்படாத பானைகளும் கண்டறியப்பட்டுள்ளன. வர்ணம் தீட்டிய பானைகளில் ஒரே ஒரு பானையை தவிர மற்ற பானைகளை பண்டைய கால மக்கள் கலைநயத்துடன் வடிவமைத்துள்ளனர்.


ஒரு பானையின் மேற்புற வெளிப்பகுதியில், இரண்டு வட்ட கோடுகள்,கீழ்பகுதியில்மூன்று வட்ட கோடுகள் காணப்படுகின்றன.



மற்றொரு பானையின் வெளிப்புற நடுப்பகுதியில் மூன்று வட்ட கோடுகளின் நடுவே இலைகள் வரையப்பட்டுள்ளன.


கிட்டத்தட்ட 2,600 ஆண்டுகளுக்கு முன்பே சுடுமண் முத்திரைகள் கண்டறியப்பட்டுள்ளதால் பானைகளிலும் அச்சுகளை வைத்து வரைந்திருக்கலாம்.


கீழடி அகழாய்வில் கிடைத்த ஒரு சில பானைகள், அடர்சிவப்பு நிறத்தில் காணப்படுகின்றன.


எனவே, இதில் குறிப்பிடத்தக்க பொருட்கள் வைத்திருக்க வாய்ப்புள்ளது என ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.

Advertisement