ரூ.5 கோடி வேணும், புனேயில் வீடும் வேணும்: ஒலிம்பிக் பதக்கம் வென்றவரின் தந்தைக்கு ஆசை!

10


மும்பை: பாரிஸ் ஒலிம்பிக், துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற ஸ்வப்னில் குசேலேவின் தந்தை, தனது மகனுக்கு மஹா., அரசு ரூ.2 கோடி பரிசுத் தொகை வழங்கியது ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்தார். தனது மகனுக்கு, ரூ.5 கோடி பரிசுத்தொகை மற்றும் புனேயில் வீடு வாங்கி கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.


மகாராஷ்டிராவின் கோலாப்பூர் அருகே உள்ள கம்பல்வாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்வப்னில் குசேலே. இவருக்கு வயது 29. இவர், பாரிஸ் ஒலிம்பிக், துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றார். இவருக்கு மஹா., அரசு ரூ.2 கோடி பரிசுத் தொகை வழங்கி கவுரவித்தது. இந்த தொகை ஏமாற்றம் அளிப்பதாக, குசேலேவின் தந்தை அதிருப்தி தெரிவித்தார். கோலாப்பூரில் நிருபர்களிடம் ஸ்வப்னில் குசேலேவின் தந்தை, சுரேஷ் குசலே கூறியதாவது:


ஹரியானா அரசு தனது மாநிலத்தை சேர்ந்தவர்கள் பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றால், ஒவ்வொரு வீரருக்கும் ரூ.5 கோடி வழங்குகிறது. மஹாராஷ்டிரா அரசு ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்பவருக்கு ரூ.5 கோடியும், வெள்ளிப் பதக்கம் வெல்பவருக்கு ரூ.3 கோடியும், வெண்கலப் பதக்கம் வெல்பவருக்கு ரூ.2 கோடியும் வழங்குகிறது.


ஸ்வப்னில் ஒரு தாழ்மையான பின்னணியைச் சேர்ந்தவர் என்பதால், தொகை குறைவாக இருக்கிறதா? எம்.எல்.ஏ., அல்லது அமைச்சர் மகனாக இருந்திருந்தால் வெகுமதித் தொகை அதிகமாக இருந்திருக்குமோ? மஹா.,வில் விளையாட்டு வளாகத்தில் உள்ள 50 மீட்டர் மூன்று நிலை துப்பாக்கி சுடும் அரங்குக்கு தனது மகனின் பெயரை சூட்ட வேண்டும். ஸ்வப்னிலுக்கு பயிற்சிக்கு எளிதாகச் செல்லும் வகையில் பாலேவாடி விளையாட்டு மைதானத்திற்கு அருகில் ஒரு வீடு வாங்கி கொடுக்க வேண்டும். ரூ.5 கோடி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.



ஒலிம்பிக் போட்டியில், வரலாற்றுச் சிறப்புமிக்க வெண்கலப் பதக்கம் வென்றதைத் தொடர்ந்து, இந்தியாவின் ஸ்வப்னில் குசேலேக்கு இந்திய ரயில்வேயில் இரட்டிப்பு பதவி உயர்வு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement