ஹரியானா தேர்தல் முடிவின் 'அந்த' 10 நிமிடங்கள்! சஸ்பென்சில் பாஜ., காங்கிரஸ் கட்சிகள்

10

சண்டிகர்: ஹரியானாவில் பா.ஜ., காங்கிரஸ் இடையே பெரும்பான்மைக்கு தேவையான தொகுதிகளில் மாறி, மாறி முன்னிலை என்ற நிலைமை, வெறும் 10 நிமிடங்களில் மாறி இருக்கின்றன.



பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஜம்முகாஷ்மீர், ஹரியானா தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் காங்கிரசுக்கு வெற்றி என்று கூறப்பட்டு இருந்தது.

இந் நிலையில் அறிவித்தப்படி இன்று ஹரியானா ஓட்டு எண்ணிக்கை மொத்தமுள்ள 90 தொகுதிகளிலும் 3 அடுக்கு பாதுகாப்புடன் தொடங்கியது. ஓட்டு எண்ணிக்கையின் தொடக்கம் முதலே பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை வகித்தது.

மொத்தமுள்ள 90 தொகுதிகளில் மெஜாரிட்டி பெற 46 இடங்களில் வெற்றி பெற்றாக வேண்டும். ஓட்டு எண்ணிக்கை தொடங்கப்பட்ட சிறிது நேரத்திலேயே 50 முதல் 55 தொகுதிகளை கடந்து காங்கிரஸ் முன்னிலை வகித்தது. பா.ஜ., 20 முதல் 25 தொகுதிகள் வரை முன்னிலையில் நீடித்தது.

நேரம் செல்ல, செல்ல பெரும்பான்மைக்கு தேவையான தொகுதிகளை காங்கிரஸ் எட்டிப்பிடித்ததாக தொடக்கத்தில் வெளியான முடிவுகள் கூறின. கிட்டத்தட்ட ஓட்டு எண்ணிக்கை தொடங்கிய ஒன்றரை மணிநேரம் வரை இப்படித்தான் முடிவுகள் இருந்தன.

அதன் பின்னர் காலை 9.45 மணியை கடந்த போது பா.ஜ., பெரும்பான்மைக்கு தேவையான 45 தொகுதிகளில் முன்னிலையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டது. தொடக்கத்தில் 46 தொகுதிகளில் முன்னிலையில் இருந்த காங்கிரஸ் பின்னடைவாக 38க்கும் கீழான தொகுதிகளில் மட்டும் முன்னிலை என்று தகவல்கள் வெளியாகின.

தொடர்ந்து முன்னிலை நிலவரங்கள் மாறிக் கொண்டே இருக்க, பா.ஜ., காங்கிரஸ் தொண்டர்கள் குழம்பி போயினர். கிட்டத்தட்ட 38 தொகுதிகளில் இவ்விரு கட்சிகள் இடையே வெறும் 500 ஓட்டுகள் வித்தியாசம் இருப்பது இதற்கு காரணம். ஹரியானாவில் காங்கிரசுக்கு தான் வெற்றி என்று கருத்துக்கணிப்புகள் கூறிய நிலையில் தேர்தல் முடிவுகளின் நிலைமை அதை பொய்யாக்கலாம் என்ற நிலையே நிலவுகிறது.

Advertisement