துடைக்கப்பட்டது துடைப்பம்! ஹரியானாவில் மொத்தமும் போச்சு!

13

சண்டிகர்: ஹரியானா தேர்தல் முடிவில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்கள் 90 பேரும் படுதோல்வி அடைந்துள்ளனர்.

ஜம்முகாஷ்மீர், ஹரியானா தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து அரசியல் களம் தீயாக மாறியது. வேட்பாளர்கள் தேர்வு, பிரசாரம், தேர்தல் வியூகம் என்று அனைத்துக் கட்சிகளும் சுழன்றன.

ஹரியானாவில் காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையே கூட்டணி பேச்சுவார்த்தைகள் ஒருபக்கம் நடந்தன. முடிவில், கூட்டணி இறுதி வடிவம் பெற காத்திருந்த ஆம் ஆத்மி, திடீரென தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது. பின்னர் பல கட்டங்களாக 90 தொகுதிகளுக்கான கட்சியின் வேட்பாளர்களை அறிவித்தது.

வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு ஓட்டுப்பதிவும் முடிந்து, இன்று முடிவுகளும் வெளியாகின. ஹரியானா மாநிலத்தில் பாஜ., காங்கிரஸ் கட்சிகள் இடையே முன்னணி நிலவரம் மாறி, மாறி வந்தது. ஒரு கட்டத்தில் பின்னடைவில் இருந்து பா.ஜ., பெரும்பான்மைக்கு தேவையான 46 தொகுதிகளை கடந்தும் பல தொகுதிகளில் முன்னிலை வகித்தது. காங்கிரசும் கிட்டத்தட்ட 35 தொகுதிகள் வரை முன்னிலையில் இருந்தது.

இதில் ஆம் ஆத்மி என்ற கட்சியின் 90 வேட்பாளர்களும் தொடக்கம் முதலே கடும் பின்னடைவில் இருந்தனர். பா.ஜ., காங்கிரஸ் கட்சிகள் வேட்பாளர்களே முன்னிலை, பின்னடைவு என்று மாறி, மாறியே அரசியல் களம் இருந்தது. ஒரு தொகுதியில் கூட எங்கும் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர்கள் முன்னிலையிலேயே இல்லை. 5 சுயேட்சை வேட்பாளர்கள் முன்னிலை வகித்த நிலையில் ஆம் ஆத்மியின் சுவடே காணப்படவில்லை.

தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவிடப்பட்ட ஓட்டு எண்ணிக்கை நிலவரத்திலும் அக்கட்சியின் வேட்பாளர்கள் பற்றிய விவரங்கள் குறிப்பிடப்படவில்லை. வெறும் 1.48 சதவீதம் ஓட்டுகள் மட்டுமே பெற்றுள்ளதாக பதிவிடப்பட்டு உள்ளன.

வாய்ச்சவடால் பேசிய ஆம் ஆத்மி கட்சி தலைவர்களுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும் என்கின்றனர் பா.ஜ., காங்கிரஸ் தொண்டர்கள்.

Advertisement