அ.தி.மு.க., மனித சங்கிலி போராட்டம்: தேவையற்றது என தி.மு.க., கண்டனம்

1

சென்னை : சொத்து வரி உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, அனைத்து மாநகராட்சி பகுதிகளிலும் நேற்று, அ.தி.மு.க., சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. உயர்த்தப்பட்ட சொத்து வரியை திரும்பப் பெற வேண்டும். மின் கட்டணம், பத்திரப்பதிவு கட்டணம் மற்றும் பால் பொருட்கள் விலை உயர்வை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, இப்போராட்டம் நடத்தப்பட்டது.



மாநகராட்சி வார்டுகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சி வார்டுகளிலும் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்றவர்கள், தி.மு.க., அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.


அ.தி.மு.க., போராட்டம் குறித்து, அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது: அ.தி.மு.க ஆட்சியில்தான் சொத்து வரி உயர்த்தப்பட்டது என்பதை பழனிசாமி மறந்து விட்டார். 2018ல், குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களுக்கு,50 முதல் 100 சதவீதம் வரை சொத்து வரியை உயர்த்தினர்.


கடந்த 2019ல் உள்ளாட்சி தேர்தலை ஒட்டி, சொத்து வரி உயர்வை திரும்பப் பெற்றிருந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் சொத்து வரியை உயர்த்த வேண்டும் என, மத்திய அரசு தெரிவித்தபோது, அதற்கு சம்மதம் தெரிவித்தது அ.தி.மு.க., அரசுதான்.


உட்கட்சியில் ஏற்பட்டுள்ள கோஷ்டி சண்டையை மறைக்க, இப்படி ஒரு நாடகத்தை நடத்தி வருகிறார் பழனிசாமி. மக்களை திசை திருப்புவதற்காக செய்யும் பொய்யான போராட்டங்களை, பழனிசாமி நிறுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement