வெங்கடரமண சுவாமி கோவிலுக்கு காணிக்கையாக காலணி வழங்க நுாதன ஊர்வலம்

வெங்கடரமண சுவாமி கோவிலுக்கு
காணிக்கையாக காலணி வழங்க நுாதன ஊர்வலம்
கரூர், அக். 10-
தான்தோன்றிமலை, கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலுக்கு, காணிக்கை செலுத்த மெகா சைஸ் காலணியை, பக்தர்கள் ஊர்வலமாக கொண்டு சென்றனர்.
கரூர் மாவட்டம், தான்தோன்றிமலையில் கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், ஆண்டு தோறும் புரட்டாசி மாதத்தில் தேர்த்திருவிழா நடந்து வருகிறது. அப்போது, பக்தர்கள் சுவாமிக்கு பல்வேறு பொருட்களை, காணிக்கையாக வழங்குவது வழக்கம்.
அதன்படி, திண்டுக்கல் மாவட்டம், கருங்கல் பஞ்சாயத்து, சின்னதம்பி பட்டி பகுதியை சேர்ந்த பக்தர்கள், சம்மாளி என்ற காலணியை தயார் செய்து, தான்தோன்றிமலை வெங்கடரமண சுவாமிக்கு ஆண்டுதோறும் கொடுத்து வருகின்றனர். நடப்பாண்டு, மெகா சைசில், ஒரு காலணியை தயார் செய்து தலையில் வைத்து கொண்டு, 30க்கும் மேற்பட்ட பக்தர்கள் தாரை தப்பட்டையுடன் ஊர்வலமாக, திண்டுக்கல்லில் இருந்து கடந்த, 7 ல் புறப்பட்டனர். நேற்று காலை கரூர் வந்தனர்.
இது குறித்து, சின்ன தம்பிபாளையத்தை சேர்ந்த பக்தர்கள் கூறியதாவது: கரூர், தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலுக்கு பல ஆண்டுகளாக, காணிக்கையாக காலணி வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று காரணமாக, 2020, 21ல் மட்டும் காணிக்கை வழங்கும் நிகழ்ச்சி நடக்கவில்லை. நடப்பாண்டு, பக்தர்களிடம் பெற்ற நன்கொடை மூலம், தோல் வாங்கி மெகா சைசில், ஒரு காலணியை தயார் செய்து ஊர்வலத்தை தொடங்கினோம்.திண்டுக்கல் மாவட்டத்திலும், பல முக்கிய நகரங்களுக்கு ஊர்வலமாக சென்று விட்டு, கரூர் வந்துள்ளோம். வரும், 11ல், நான்காவது (நாளை) சனிக்கிழமையன்று, கரூர் தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில் பூஜை செய்து, காலணியை காணிக்கையாக வழங்க உள்ளோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement