வஞ்சுலீஸ்வரர் கோவில் சொத்துக்கள் ஆய்வு அறநிலையத்துறை உதவி ஆணையருக்கு உத்தரவு


வஞ்சுலீஸ்வரர் கோவில் சொத்துக்கள் ஆய்வு
அறநிலையத்துறை உதவி ஆணையருக்கு உத்தரவு
கரூர், அக். 10--
கரூர் வஞ்சுலீஸ்வரர் கோவிலின், 140 ஆண்டுகளுக்குரிய சொத்து ஆவணங்களை ஆய்வு செய்ய வேண்டும் என, ஆனிலையப்பர் அறக்கட்டளை அறங்காவலர் சுப்பிரமணியம் சார்பில், முதல்வர் தனிப்பிரிவுக்கு அளிக்கப்பட்ட மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஹிந்துசமய அறநிலை துறை கரூர் உதவி ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:கரூர் உழவர் சந்தை அருகில், வஞ்சுலீஸ்வரர் கோவில் பிரம்மனுக்கு சாபம் நீக்கிய தலமாகும். இங்கு, பிரம்மதீர்த்த குளம் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன் நின்று போன வைகாசி பிரமோற்சவத்தை, வரும் ஆண்டிலிருந்து நடத்த வேண்டும். தற்போது கோவிலில் உள்ள சிலைகளை முறைப்படி பதிவேற்றம் செய்ய வேண்டும். சாலை, சுகாதாரம் உட்பட தேவையான அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ள வேண்டும்.கோவில் அருகில் நடக்கும் சட்டவிரோதமான செயல்களை தடுக்க, போலீசார் ரோந்து பணி மேற்கொள்வது அவசியமாகும். இக்கோவில் அமராவதி ஆற்றுங்கரையோரம் அமைந்துள்ளதால், நீர்வள ஆதாரத்துறை ஒருங்கிணைந்து மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும். கோவிலுக்கு சொந்தமான அனைத்து வகையான சொத்துக்கள் குறித்தும், வருவாய்த்துறை, உள்ளாட்சி நிர்வாகம் உள்பட அனைத்து துறையினர் இணைந்து தணிக்கை மேற்கொள்ள வேண்டும். பத்திரப்பதிவு துறையிடம் இருந்து, 140 ஆண்டுகளுக்குரிய கோவில் சொத்து ஆவணங்களை பெற்று, அவற்றையும் முறையான பரிசீலித்து நடவடிக்கை தொடர வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.முதல்வர் தனிப்பிரிவுக்கு அனுப்பப்பட்ட இந்த மனு மீது, கரூர் உதவி ஆணையருக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஹிந்து
சமய அறநிலை துறையின் திருப்பூர் இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement