பா.ம.க., கட்சி கொடியேற்ற எதிர்ப்பு இருதரப்பிடம் போலீஸ் பேச்சுவார்த்தை


பா.ம.க., கட்சி கொடியேற்ற எதிர்ப்பு
இருதரப்பிடம் போலீஸ் பேச்சுவார்த்தை
போச்சம்பள்ளி, அக். 10-
போச்சம்பள்ளி அடுத்த, பாளேதோட்டம் கிராமத்தில், பா.ம.க., தலைவர் அன்புமணி பிறந்தநாளையொட்டி நேற்று, பா.ம.க., கொடியேற்ற அக்கட்சியை சேர்ந்தவர்கள் பாளேதோட்டம் பஞ்., அலுவலகத்தை ஒட்டியும், எதிரிலும் டிஜிட்டல் பேனர் வைத்திருந்தனர். அப்பகுதியில் கடந்த, 20 ஆண்டுகளுக்கும் மேலான, பா.ம.க., கொடி கம்பம் வைத்திருந்ததை, கடந்த லோக்சபா தேர்தலின்போது அகற்றப்பட்டது. அதன்பின் தற்போது வரை, பா.ம.க., கொடி கம்பம் இல்லாமல் இருப்பதாக அக்கட்சியினர் கூறுகின்றனர். நேற்று, பா.ம.க.,வினர் கொடிக்கம்பம் அகற்றப்பட்ட பகுதியில், புதிய கம்பம் நட்டு அதில் கொடியேற்ற முயற்சித்தனர். இதற்கு அங்குள்ள ஒரு
தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
போச்சம்பள்ளி தாசில்தார் சத்யா, இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி பேச்சுவார்த்தை நடத்தினர். பின் இரு தரப்பினரையும் போச்சம்பள்ளி தாலுகா அலுவலகத்திற்கு அழைத்து தாசில்தார் சத்யா முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு காணப்படவில்லை. அங்கிருந்து வெளியேறிய, பா.ம.க., கிழக்கு மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் கட்சியினர், 50க்கும் மேற்பட்டோர் பாளேதோட்டம் பஞ்., அலுவலகம் முன், பா.ம.க., கொடியேற்றி, இனிப்பு வழங்கினர். தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால், சம்பவ இடம் வந்த பர்கூர் டி.எஸ்.பி., முத்துகிருஷ்ணன், தாசில்தார் சத்யா, இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி மற்றும் 50க்கும் மேற்பட்ட போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணி ‍மேற்கொண்டுள்ளனர்.

Advertisement